கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம்

0
172

எதிர்வரும் மார்ச் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இந்தியா இராமநாதபுரம் மாவட்டத்தில் இடம்பெற்றது.

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்பதற்கு இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் வருவதற்கு இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா ராமேஸ்வரத்தில் இருந்து 2 ஆயிரத்து 397 பேர் செல்ல இருக்கின்றனர்.

60 விசைப்படகுகளிலும் 12 நாட்டு படகுகளிலும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர்.

அந்த வகையில் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்பவர்களுக்குரிய பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி தங்கதுரை, இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை, மருத்துவத்துறை சுகாதாரத்துறை ராமேஸ்வரம் நகராட்சி அலுவலர்கள் மற்றும் விசைப்படகு நாட்டு படகு மீனவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு செல்வது குறித்தும் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.