தகவல் அறியும் சட்டமூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும்

0
153

பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், அவர்கள் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலான விடயங்களை, தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக அவர்களிடம் கோரும் போது அவற்றை அவர்கள் வழங்க வேண்டும். இந்த சட்டமானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் முக்கியத்துவமான தீர்ப்பொன்றை நேற்று முன்தினம் வழங்கியது.

பாராளுமன்று உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களைக் கோரி, சாமர சம்பத் என்ற ஊடகவியலாளர் 21/06/2018 அன்று தகவல் அறியும் சட்டம் ஊடாக விண்ணப்பித்திருந்தார். 

இதில் தமது சொத்துகள் மற்றும் பொறுப்புகளடங்கிய பிரகடனத்தை பாராளுமன்றத்துக்கு ஒப்படைத்துள்ள உறுப்பினர்களின் பெயர்களை அறியத்தருமாறு கோரப்பட்டிருந்தது. 

எனினும் பாராளுமன்ற தகவல் வழங்கும் அதிகாரி, 21/-08-/ 2018 திகதியிடப்பட்ட பதில் கடிதத்தில் , 1975 ஆம் ஆண்டின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய சட்டங்களின் படி பாராளுமன்ற சபாநாயகருக்கே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அவரது கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

இதையடுத்து தகவல் அறியும் சட்டத்தின் 32 ஆம் பிரிவின்படி ஊடகவியலாளர் சாமர சம்பத் தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு மேன் முறையீடு செய்தார்.

இவ்விண்ணப்பத்தை பரிசீலித்த ஆணைக்குழுவானது, ஊடகவியலாளர் கோரிய தகவல்களின் அடிப்படையில் சொத்து விபரங்கள் பற்றிய பிரகடனங்களை ஒப்படைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு (குறித்தளிக்கப்பட்ட அதிகாரி) தனது தீர்மானத்தை அறிவித்தது.

எனினும் இதனை சவாலுக்குட்படுத்திய பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றிய விடயங்களை 1975 ஆம் ஆண்டின் சட்டமே கட்டுப்படுத்துகின்றது என்றும் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக இந்த விபரங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவை விசாரித்தமேன் முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பை 28/02/2023 செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சம்பத் அபயகோன் மற்றும் பி. குமாரரத்தினம் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வானது, சொத்துப் பிரகடனங்களை ஒப்படைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கோரிய தகவல்களை தமக்கு வெளியிட வேண்டும் என்ற தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தை உறுதி செய்தது.

“பாராளுமன்ற உறுப்பினர்கள் என்போர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களால் பராமரிக்கப்படும் நபர்கள். அவர்கள் எல்லா நேரங்களிலும் நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, மற்றவர்கள் பின்பற்றுவதற்கு முன்மாதிரிகளை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தின் விதிகளின் கீழ் வரும் எந்தவொரு நபரும், தேவையான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் தொடர்புடைய தகவல்களை வழங்கத் தவறினால், அது அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளையும் பெறத்தக்க குற்றமாக கருதப்படும்’ ” என்று நீதிபதி அபேகோன் குறிப்பிட்டார்.

2016 ஆம் ஆண்டு தகவல் அறியும் ஆணைக்குழு தாபிக்கப்பட்டதிலிருந்து ஆணைக்குழுவின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் ஒன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட முதலாவது சம்பவமாக இது விளங்குகின்றது. 

எனினும் தீர்ப்பானது ஆணைக்குழுவுக்கு சாதகமானதாக மட்டுமின்றி தகவல் அறியும் உரிமையை நிலைநாட்டும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகவும் உள்ளதாக பலரும் இதை வரவேற்றுள்ளனர்.