தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடல் பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளிப்பது தொடர்பான பிரச்னையில் வடக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியாகத் தங்களின் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர்.
இதனை டக்ளஸ் தேவானந்தா வரவேற்றிருக்கின்றார்.
மீனவர்கள் வடபுல கடல் எல்லைக்குள் வருவது ஒரு நீண்டகால பிரச்சினை.
இந்தப் பிரச்சினையின்போது, ‘இந்திய மீனவர்கள்’ – என்றே அடையாளப்படுத்தப்படுவதுண்டு.
இந்தியாவின் ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்களுடனான பிரச்சினையென்று நோக்கினால், இந்திய மீனவர்களென்று அழைப்பது சரியானதுதான்.
ஆனால், அரசியல் பிரயோகத்தில் இது தவறானது.
இந்திய மீனவர்களென்று அவர்களை அழைப்பதற்கு பதிலாக, தமிழ்நாட்டு மீனவர்களென்று அழைப்பதே சரியானது.
ஏனெனில், அரசியல் விடயங்களில் இந்தியாவுடனான உறவும், தமிழ்நாட்டுடனான உறவும் ஒரே மாதிரியாக நோக்கப்படுவதில்லை.
தமிழ்நாடு எப்போதும் தனியாகவே நோக்கப்படுகின்றது.
தமிழ்நாட்டுடனான அரசியல் உறவுகள் தனித்துவமானவையாகவே நோக்கப்படுவதுண்டு.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால் இது இந்திய மீனவர்களுடனான பிரச்னையல்ல – மாறாக, தமிழ்நாட்டு மீனவர்களுடனான பிரச்சினையாகும்.
ஏனெனில், வடபுல கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவோர் வடஇந்திய மீனவர்கள் அல்லர்.
இலங்கை கடற்படையின் – அரசாங்கத்தின் பார்வையில் இந்திய மீனவர்களென்று அடையாளப்படுத்தினால் அதில் தவறில்லை.
ஆனால், ஈழத் தமிழ் அரசியல்வாதிகள் இதனை இந்திய மீனவர்களின் பிரச்னையாக பார்க்கமுடியாது.
மாறாக தமிழ்நாடு மீனவர்களுடனான பிரச்னையாகவே நோக்க வேண்டும்.
இந்த நீண்டகால பிரச்சினையை எவ்வாறுதான் தீர்ப்பது? இலங்கை – இந்திய அரசாங்கங்களால் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளியிட முடியவில்லை.
வடக்கு மீனவர்கள் பாதிக்கப்படும்போது, வடபுல மீனவர்களும் ஈழத் தமிழ் அரசியல்வாதிகளும் கண்டனங்களை வெளியிடுகின்றனர்.
இதேபோன்று, தமிழ்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்படும்போது, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அதனை கண்டித்து மத்திய அரசிடம் முறையிடுகின்றனர்.
இதுதான் கடந்த பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றது.
இந்தப் பிரச்னைக்காக, சுமந்திரன் தலைமையிலான குழுவினர் ஒருமுறை கடலுக்குள் இறங்கியும் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தனர்.
ஆனது எதுவுமில்லை.
வடபுல மீனவர் அமைப்புகளைப் பொறுத்தவரையில் முன்னர் கடலட்டை விடயத்தில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இப்போது தமிழ்நாட்டு மீனவர்களால் வருகின்ற பிரச்சினையின் பக்கம் திரும்பியிருக்கின்றனர்.
கடலட்டை பண்ணைகளின் பிரச்சினை முடிந்துவிட்டதா? இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அனைத்தையும் தமிழர்களிடம் விட்டுவிட்டு அது வெறும் பார்வையாளராக இருப்பதாகவே தெரிகின்றது.
பாதிக்கப்படுவதாக கூறப்படும் மீனவர்களும் தமிழர்கள் – பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்படும் மீனவர்களும் தமிழர்கள் இதனை கையாளவேண்டிய அதிகாரத்திலிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழர்.
இந்த பிரச்சினை எங்கிருந்து – எப்படி ஆராய்வது? எவ்வாறு தீர்ப்பது? அதற்கான பொறிமுறை என்ன? அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினையை கையாளுவதற்கு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அனுமதியளிக்க முற்படுகின்றது.
இதன் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதையும், அதனால் வருகின்ற இரு நாட்டு அரசியல் பதற்றங்களையும் தவிர்க்கலாமென்று அரசாங்கம் கருதுவதுபோல் தெரிகின்றது.
இலங்கை – இந்திய – தமிழ்நாடு அத்துடன் வடபுல மீனவர்கள் மற்றும் அரசியல் தலைமைகளென்று அனைவரும் ஒரு புள்ளியில் சந்தித்தால் மட்டுமே, இந்தப் பிரச்னைக்கான தீர்வை காணலாம்.
ஆனால், இது இலகுவான விடயமா?