சாகச பயணத்தை தொடரும் அஜித் குமார்

0
285

உலகளவில் திரை நட்சத்திரங்கள் நடிப்பை தவிர்த்து தனித்திறமையுடன் திகழ்வது குறைவு. மேலும் நட்சத்திரங்கள் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கான நம்பகத் தன்மையை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்துவதற்காக தங்களை வருத்திக் கொள்வதுண்டு.

ஆனால் இதற்கு முற்றிலும் எதிர் மாறாக தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித்குமார், பந்தய வாகனங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்டவர் மட்டுமல்ல வாகன பந்தய வீரரும் கூட. இவர் தனக்கு படப்பிடிப்பு அல்லாத தருணங்களில் கிடைக்கும் ஓய்வு நேரத்தை உலக முழுவதும் சாலை மார்க்கமாக பிரத்யேக வடிவமைக்கப்பட்ட துவிசக்கர வாகனத்தில் சாகச பயணத்தை மேற்கொள்வதில் அலாதியான விருப்பம் கொண்டவர்.

கடந்த முறை இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட துவி சக்கர வாகனத்தில் சாகச பயணத்தை மேற்கொண்டார். இதற்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களும்… விளையாட்டு வீரர்களும்… விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்களும்.. பொதுமக்களும்.. என பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

தற்போது இவர் மீண்டும் சர்வதேச அளவிலான துவிசக்கர சாகச பயணத்தை தொடரவிருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தப் பயணம், பரஸ்பர மரியாதை நிமித்தமாக மேற்கொள்ளப்படும் பயணம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பினை வெளியிட்டு சாகச பயணத்தை விரைவில் தொடங்கவிருக்கும் அஜித் குமாருக்கு தற்போதே சமூக வலைதள ஊடகங்கள் மூலமாக வாழ்த்துக்கள் குவியத் தொடங்கி இருக்கிறது.

இதனிடையே ‘துணிவு’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு லைகா நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் அஜித் குமார், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு தான் ‘துவி சக்கர சாகச பயணம் 2’ தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.