வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையையும் கண்டித்து, இன்று, மன்னாரில், மாபெரும் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து, இந்திய மீனவர்களுக்கு, வாரத்தில் மூன்று நாட்களுக்கு, கடலை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாகவும், இந்திய மீனவர்கள், தொடர்ச்சியாக இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதை கண்டித்தும், வடக்கு மாகாண மீனவர்கள் ஒன்றிணைந்து, மன்னாரில், மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இலங்கை கடற்பரப்பினுள், ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் இழுவை படகுகள் அத்துமீறி நுழைந்து, தொடர்ச்சியாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன.
அண்மையில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இந்திய படகுகளை இலங்கை கடலில் கடல் தொழில் ஈடுபட அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பாக, இந்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில், வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில், இன்று காலை 10.00 மணியளவில், மன்னாரில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகள் உள்ளடங்களாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடினர்.
காலை 10.30 மணியளவில், மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம், மன்னார் வைத்தியசாலை வீதி ஊடாக, மன்னார் பஜார் பகுதியை அடைந்தது.
ஊர்வலத்தில் சென்றவர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கோஷங்களை எழுப்பினர்.
மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் பஜார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன.
இதன் போது, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, தமது ஆதரவை வழங்கினர்.
மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் அருட்தந்தையர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
வடக்கு மீனவர்களின், வாழ்வாதாரத்தையும் வளத்தையும் வருவாயையும் பாதிக்கும், இந்திய இழுவைப் படகுகளுக்கு, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி பத்திரம் வழங்குதல் தொடர்பான அமைச்சரின் கருத்து, உடனடியாக மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும், இது தொடர்பான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்துடன், வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி, தமது கோரிக்கை அடங்கிய மகஜரை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கும் வகையில், மீனவர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.