தங்கராஜூ சுப்பையான்ற தமிழருக்கு சிங்கப்பூர் அரசாங்கம் இன்றைய தினம் தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
தங்கராஜூ சுப்பையா கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். 2013ம் ஆண்டு மலேசியாவில் இருந்து ஒரு கிலோகிராம் கஞ்சாவை தங்கராஜூ சுப்பையா கடத்தினார் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எனினும் தங்கராஜூ சுப்பையாவிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்படவில்லை என்ற போதும் கஞ்சாவை அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது..
2018ஆம் ஆண்டு தங்கராஜூ சுப்பையாவுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தண்டனை உறுதி செய்யப்பட்டது முதல் பல்வேறு முறையீட்டு மனுக்களை அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த போதும் குறித்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டதால் தங்கராஜூ சுப்பையாவின் தூக்கு தண்டனை உறுதியானதுஇந்த நிலையில் ஐ.நா மனித உரிமை அமைப்பு உள்ளிட்டவை இந்த விடயத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த போதும் இன்றைய தினம் தங்கராஜூ சுப்பையாவின் தூக்கு தண்டனையை சிங்கப்பூர் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த மலேசிய தமிழ் இளைஞரான நாகேந்திரன் தர்மலிங்கம் தூக்கிலிடப்பட்டிருந்தார்.
நாகேந்திரன் தர்மலிங்கம் குற்றவாளி என 2019இல் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனடிப்படையில் கடந்த ஆண்டு நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.