இப்படியும் நடக்கிறது…!

0
251

பதின்மூன்று என்பது அதிர்ஷ்டம் இல்லாத இலக்கம் என்ற ஒரு நம்பிக்கை உலகம் எங்கும் இருக்கின்றது.
அந்த நம்பிக்கை என்பது ஆஸ்பத்திரிகளில் பதின்மூன்றாம் வார்ட் இருக்காது.
அதிகம் ஏன் விமானத்தில் பதின்மூன்றாம் இலக்கத்தில் ஆசனம்கூட இருக்காது.
அந்த அளவுக்கு அது ஒரு ராசி இல்லாத இலக்கம் என்று உலகம் முழுவதும் நம்புகின்றது.
மூட நம்பிக்கைக்கு அளவு இருக்கவேண்டும் என்பார்கள்.
ஆனால், அதனை ஏனோ மூட நம்பிக்கை என்றும் அளவெடுக்காமல் விட்டுவிட்டர்கள்.
நமக்கும் இந்த பதின்மூன்று ஒரு ராசியில்லாத இலக்கமாக நீண்டகாலமாகவே இருந்து கொண்டிருக்கின்றது.
இலங்கை அரசியலமைப்பில் பதின்மூன்றாவது திருத்தமாக செய்யப்பட்ட அந்தத் திருத்தமே இலங்கையில் ஒன்பது மாகாணங்களிலும் சபைகளை உருவாக்கியது.
இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதையே பிரதான இலக்காகக்கொண்டு, இலங்கையும் இந்தியாவும் ஒப்பந்தம் செய்துகொண்டதும் – அந்த ஒப்பந்தத்தின் பலனாக இந்த அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டதும் நாம் அறிந்ததுதான்.
அந்தத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதை உறுதிசெய்யவேண்டியது எப்படி இந்தியாவின் கடமையோ, அதுபோல அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது- இலங்கையின் கடமை.
இன்று அரசியலமைப்பு சட்டத்தில் இருப்பதை செய்ய மறுப்பதும் அரசியலமைப்பை மீறிய செயல்தான்.
அதனை ஒருதடவை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதனை எதிர்ப்பவர்களுக்கு தெரிவித்திருந்தார்.
அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரு விடயத்தை செய்யக்கூடாது என்பவர்கள், அதனை நீக்குகின்ற திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.
இல்லையேல், ஒரு நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்ற அடிப்படையில் அதனை நிறைவேற்றவேண்டியது தனது கடமை என்று ரணில் ஒரு தடவை தெரிவித்திருந்தார்.
பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கோரி இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதுவதற்கு தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை ஆரம்பித்த ரெலோ கடைசியில் அதில் வெற்றிபெற்றதும் பழைய சங்கதிகள்.
அந்தக் கோரிக்கைக் கடிதம் பற்றி பல தடவை இந்தப் பத்தியில் கூறியாகிவிட்டது.
ஆனால், அந்தக் கடிதம் எழுதுகின்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளை மாத்திரமே சேர்த்துக்கொண்ட ரெலோ, மனோ கணேசனையும் ரவூப் ஹக்கீமையும் கூட அதில் கையெழுத்திடவைக்க விரும்பியது.
இந்த விடயங்கள் நடந்துகொண்டிருந்தபோது, பதின்மூன்றுக்கு ஆதரவான வேறு சில தமிழ் கட்சிகள் தாமும் ஒன்றுகூடிப் பேசி அதுபோன்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தன.
ஈ. பி. ஆர். எல். எவ். பத்மநாபா அணியினரின் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி, மு.சந்திரகுமாரின் சமத்துவக் கட்சி, திருகோணமலை எந்திரி விக்னேஸ்வரனின் தமிழர் மகாசபை, பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகள் ஒன்றுகூடி இந்த கோரிக்கையை விடுத்தன.
பின்னர் மிக அண்மையில் தமிழர் மகாசபை விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணித் தலைவரும் முன்னாள் வடக்கு முதலமைச்சருமான
சி. வி. விக்னேஸ்வரனை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசியதும் அந்த சந்திப்பில் வடக்கு ஆளுநர் கலந்துகொண்டதும் செய்திகளாக வெளிவந்தன.
இப்போது அந்த சந்திப்பின் தொடர்ச்சியாக மீண்டும் பதின்மூன்றை வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவில் தமிழ்க் கட்சிகளின் கையொப்பத்தைப் பெறும் முயற்சி நடப்பதாகத் தெரியவருகின்றது.
அந்தக் கோரிக்கை மனுவில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் 154ரி உறுப்புரையின் பிரகாரம் – ஆலோசனை சபையை நியமிக்க ஜனாதிபதியை கோரும் யோசனைகளும் இடம்பெற்றிருக்கின்றனவாம்.
மாகாண சபைகள் மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளால் ஆளப்பட்டாலும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென்று மேலதிகமாக ஓர் ஆலோசனைச் சபை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் அடுத்த தேர்தல் நடக்கும்வரை அந்த சபையே அதனை நிர்வகிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இந்த மனுவில் இடம்பெற்றிருக்கின்றனவாம்.
இந்தக் கோரிக்கைகளை இலங்கை அரசிடம், அதாவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக வலியுறுத்த அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு பல தமிழ்த் தேசியக் கட்சிகள் இணங்கவில்லை என்று தெரியவருகின்றது.
ஆலோசனை சபையை அமைத்தால் தேர்தலை இன்னமும் பிற்போட அரசுக்கு உதவுவதாக ஆகிவிடும் என்பது குறித்து யாரும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.
பதின்மூன்றாவது திருத்தம் என்பது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பெறுபேறாக உருவானது.
அதனை அமுல்படுத்த வைக்கவேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு.
ஏற்கனவே, இந்தியாவிடம் தமிழ்க் கட்சிகள் அந்தக் கோரிக்கையை வலியுறுத்திக் கடிதம் எழுதிவிட்டன.
இந்த நிலையில் நேரடியாக இலங்கை அரசுடன் அது விடயமாக பேசத் தொடங்கினால், இந்தியா அழுத்தம் கொடுக்கின்றவேளைகளில், நாங்கள் தமிழர் தரப்புடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று இந்தியாவை புறம்தள்ளி வைக்க உதவியதாக ஆகிவிடும் என்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் வாதமும் நியாயமானதுதான்.
அதைவிட இந்த மாகாண சபைகளுக்கு ஆலோசனை சபை ஒன்றை அமைக்கவேண்டும் என்ற யோசனை இப்போது சரியானதுதானா என்பதை பின்னர் பார்ப்போம்.!

ஊர்க்குருவி