முறைகேடு ஒன்று தொடர்பாக தகவல் அளித்த ஒருவருக்கு 279 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (8,720 கோடி ரூபா) சன்மானம் வழங்கியதாக அமெரிக்காவின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்கமைப்பாளரான இந்த ஆணைக்குழுவின் வரலாற்றில் அளிக்கப்பட்ட மிகப் பெரிய சன்மானம் இதுவாகும்.
இதற்கு முன்னர் இதுபோன்று ஊழலை அம்பலப்படுத்தியமைக்காக ஒருவருக்கு, ஆகக்கூடுதலான வெகுமதியாக 114 மில்லியன் டொலர்கள் 2020 ஒக்டோபரில் வழங்ப்பட்டிருந்தன.
அத்தொகையைவிட இரு மடங்குக்கும் அதிகமான வெகுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. இத்தகவல் வெற்றிகரமாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு உதவியதாக அமெரிக்காவின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (05) தெரிவித்துள்ளது.
எனினும், அந்நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவர் அளித்த தகவல் அல்லது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இத்தகைய சன்மானம் வழங்கும் திட்டம் 2011 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியது. ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் அபராதம் வசூலிக்கப்படக்கூடிய தகவல் வழங்குபவர்களுக்கு 10 முதல 30 சதவீதமான சன்மானம் வழங்கப்படும்.
2011 ஆம் ஆண்டிலிருந்து ஒரு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை சன்மானங்களாக வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.