குருகிராம்: ஹரியாணாவில் திங்கள்கிழமை வெடித்த மதக் கலவரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. போலீசார் இதுவரை 116 பேரை கைது செய்துள்ளனர். அத்துடன், 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஹரியாணாவில் நடந்த வகுப்புவாத வன்முறையானது, தலைநகர் டெல்லியில் இருந்து 20 கிமீ தள்ளியுள்ள குருகிராம் வரை எட்டியுள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்த வன்முறையில் பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதன் காரணமாக டெல்லியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தால் மிகுதியாக பாதிக்கப்பட்ட குருராமின் சோஹ்னா பகுதியில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புதன்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹரியாணா கலவரம் தொடர்பான அண்மைத் தகவல்கள்:
ஹரியணாவின் நு பகுதியில் நடந்த வன்முறையைக் கண்டித்து தலைநகர் டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகள் கண்ட போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேவாட் பகுதியில் நடந்த வன்முறையைக் கண்டித்து விஸ்வ இந்து பரிஷித் அமைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், வலதுசாரி அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷித் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகள் மானேசர் பகுதியில் உள்ள பீசம் மந்திரில் மகா பஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
வன்முறையைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த நாள் வன்முறை கும்பல் ஒன்று குருராமிலுள்ள பாட்ஷாபூரில் வன்முறை கும்பல் ஒன்று அங்குள்ள உணவகத்துக்கு தீ வைத்தது. தொடர்ந்து அருகில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தின. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் கடைகளை குறிவைத்து தாக்கிய அந்த வன்முறை கும்பல் மசூதிக்கு முன்பு “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டனர். வன்முறையைத் தொடர்ந்து பாட்ஷாபூர் சந்தை மூடப்பட்டது.
குருகிராமில் செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறையைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லி உஷார்படுத்தப்பட்டுள்ளது. குருகிராமில் வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததாக தெரிவித்த போலீசார், சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், அதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், உதவி தேவைப்பட்டால் 112 என்ற எண்ணைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடந்த வன்முறையின் தாக்கம் டெல்லியில் பரவாமல் தடுக்கும் வகையில் தலைநகர் டெல்லியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தலைநகரை அடுத்துள்ள பகுதிகளில் நடந்த வன்முறையால் டெல்லியில் ஏதாவது கலவரம் ஏற்படுமானால், அதைத் தடுக்கும் வகையில் போலீசார் தயார் நிலையில் இருக்கின்றனர்” என்று தெரிவித்தார். டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘டெல்லியில் பதற்றமான பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.