ஜனாதிபதி தேர்தல் நெருங்க நெருங்க தெற்கில் அரசியல் பரபரப்படைந்து வருவதுடன் அணிகள் சேரும் முயற்சிகள் பல்வேறு தரப்பினராலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரதான வேட்பாளராக களம் இறங்கவுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவரின் கட்சி பலவீனமடைந்திருப்பது ஒரு பெரிய பலவீனம்தான்.
ஆனால், எதிரணியிலிருந்து பலமான வேட்பாளர் ஒருவர் போட்டியில் களம் இறங்காதவரை அவருக்கு சாதகமான நிலைமையே காணப்படுகின்றது.
அதனால்தான் அவர் தனக்கு எதிராக பலமான வேட்பாளர் ஒருவர் களம் இறங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்.
அவரைப் பொறுத்தவரை எதிரணி பலமடைந்து விடக்கூடாது என்பதில் காட்டும் கவனத்தை, தன்னையோ அல்லது தனது கட்சியையோ பலப்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபடவில்லை என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
பொதுஜனபெரமுனவில் இரண்டு அணிகள் இருப்பது அவருக்கு எப்போதும் நல்லது என்பது தெரிந்ததுதான்.
ஆனால், அவர் அந்த இரண்டை மூன்றாக மாற்றியிருக்கிறார்.
அதிலும் முக்கியமாக அந்த மூன்றாவது அணிக்கு – மற்றைய ஓர் அணியின் ஆதரவையும் பெறுவதில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார் என்கின்றன தெற்கு செய்திகள்.
பொதுஜன பெரமுனவில் நாமல் அணி, பஸில் அணி என்று இரண்டு அணிகள் இருப்பது இரகசியமானதல்ல.
இதேவேளை சிறிய அணி ஒன்று கோட்டா அணியாகவும் இயங்கிவந்தது.
அந்த அணியைப் பலப்படுத்தி மிகப்பெரிய அணியாக மாற்றுவதிலேயே கடந்த காலங்களில் முக்கிய கவனம் செலுத்திவந்த ஜனாதிபதி ரணில், இப்போது
அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் எனத் தெரியவருகின்றது.
இன்றைய நிலையில் அறுபத்தி ஐந்து எம்.பிக்கள் அந்த அணியில் திரண்டிருக்கின்றனர்.
தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் சேர்த்து.
ஆரம்பத்தில் ஜனாதிபதியின் இந்த ‘மூவு’க்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த நாமல், இப்போது அதற்கு ஆதரவான நிலையில் இருக்கிறார் என்று அந்த வட்டாரங்களுடன் நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ஷவைப் பொறுத்தவரை அடுத்த ஐந்து ஆண்டுகள் – முடிந்தால் பத்து ஆண்டுகளுக்கு எதிரணியில் இருக்கவே விரும்புகின்றாராம்.
அதாவது எதிர்க்கட்சித் தலைவராக.
எதிரணியில் இருந்தால் மாத்திரமே தன்னையும் கட்சியையும் வளப்படுத்தி விடலாம் என்று கணக்குப்போடும் அவர், அதற்கு இடைஞ்சலாக இருக்கும் பஸில் ராஜபக்ஷபல வீனப்படுவதெனில் ரணில் தரப்புக்கு ஆதரவாக பிரியும் அந்த அணி பலமானதாக இருப்பது நல்லது என்று நினைக்கிறாராம்.
ஆனால், பஸில் ஆதரவு தரப்பினரோ பஸிலை அடுத்த பிரதமராக்க வேண்டும் என்றும் அப்படியெனில்தான் பொதுஜன பெரமுன ரணிலுக்கு ஆதரவு வழங்கவேண்
டும் என்றும் கட்சிக்கு அழுத்தம் கொடுத்துவரும் நிலையில், பஸிலுக்கு ஆதரவாக வெளிச் சக்தி ஒன்றும் அழுத்தம் கொடுப்பதாகத் தெரியவருகின்றது.
இதனால்தான் பொதுஜன பெரமுனவிலிருந்து பெரும் எண்ணிக்கையானவர்கள் வெளியேறுவது தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நாமல் தரப்பில் விரும்பப்படு
கின்றதாம்.
பொதுஜன பெரமுனவை – அவர்களுக்கு இடையே இருக்கும் இந்த ‘கயிறிழுப்பை’ பயன்படுத்தியே தனக்கு சாதகமாக மாற்றிவிட்ட ரணிலின் கவனம் இப்போது சஜித் பக்கம் திரும்பியிருக்கின்றது.
சஜித் தரப்பும் ரணில் தரப்பும் மீண்டும் இணைய வேண்டும் என்ற குரல் இப்போது சஜித் தரப்பிலிருந்து பலமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றது.
இதற்கான முயற்சியில் ஈடுபடும் சஜித் தரப்பினர், ஜனாதிபதி தேர்தலின் போதே அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சஜித்தை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிவருகின்றனர்.
ஆனால், தற்போதைய பிரதமரும் தனது றோயல் கல்லூரி காலத்து நண்பருமான தினேஷ் குணவர்த்தனவுடனான கூட்டு எந்தவித நெருக்கடியுமின்றி, சுமுகமாக செல்வதை வசதியாகக் கருதும் ரணில் சஜித்தை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரசிக்கவில்லை என்கின்றன ஜனாதிபதிக்கு
நெருக்கமான வட்டாரங்கள்.
அவரின் ‘குறி’ இப்போது சஜித்தை தனிமைப்படுத்தி விட்டு கட்சியிலுள்ள மற்றவர்களை எப்படி தன்னோடு சேர்த்துக்கொள்வது என்பது தானாம்.
ஆனால், சஜித் தரப்பில் அவருக்கு நெருக்கமான சிலர் தமது ஆட்சியின் பொருளாதாரக் கொள்கை எப்படியிருக்கவேண்டும் என்பதை தயாரிப்பதில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டிருக்கின்றனராம்.
அவர்களில் நம்மவர் ஒருவரும் இணைந்திருப்பது கூடுதல் தகவல்.
- ஊர்க்குருவி.