இப்படியும் நடக்கிறது

0
132

சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் என்னிடம் ஆலோசனை கேட்டார்.
அவர் ஒரு மூத்த பத்திரிகையாளர்.
அவரைப்பற்றி எழுதுவதானால் இந்த பத்தி அல்ல, பல பத்திகளை எழுதினாலும் அவரைப்பற்றி எழுதி முடியாது.
அதனால் அவரைப் பற்றிய குறிப்புகளைத் தவிர்த்து அவர் கேட்ட விடயத்துக்கு வருகின்றேன்.
‘நமது மக்கள் இன்று இத்தனை அழிவுகளைச் சந்தித்த பின்னரும் ஒரு நிலையான தீர்வு இன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் இந்த நிலைக்கு நாங்களும் (அதாவது பத்திரிகையாளர்களும்) ஒரு காரணம்.
அதிலும் எனக்கு அதிக பங்கு உண்டு.
அதற்கு பிரதியுபகாரமாக சில கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கலாம் என்று யோசிக்கிறேன்.
அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்றார்.
எனக்கு பதில் சொல்ல கடினமாக இருந்தது.
‘நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?’ என்று கேட்கவேண்டும் போல இருந்தது.
ஆனால், அவரது கோரிக்கை பற்றி விவாதித்து அவரை சங்கடப்படுத்த மனம் இடம்தரவில்லை.
இந்த விடயத்தை இப்போது எழுதவேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்கலாம்.
நேற்று இந்தப் பத்தியில் சுவாமி சங்கரானந்தா என்ற பெயரில் முகநூலில் எழுதப்பட்ட பத்தி ஒன்று பற்றி எழுதியிருந்தேன்.
அதனைப் படித்த நண்பர் ஒருவர் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
அவரும் அந்தப் பத்தியை முகநூலில் முழுமையாக படித்திருக்கிறார் என்பது தெரிந்தது.
‘தமிழரசு கட்சி, தந்தை செல்வாவின் அஸ்தியை திருகோணமலைக்கு கொண்டு சென்றதால் ஏற்பட்ட விளைவுகளை வெளிச்சம் போட்டுக்காட்டிய நீங்கள் ஏன் அவர் எழுதிய மற்றையை விடயங்களைத் தவிர்த்தீர்கள்?’ என்று கேட்டார்.
‘அது வேறு எதற்காகவும் அல்ல, திலீபனின் நினைவு வைபவத்தை சர்ச்சையாக்கி அது குறித்து எழுதுவதைத் தவிர்க்க விரும்பினேன் அவ்வளவுதான்.
அதைவிட, யாரையும் திலீபனைப்போல நீங்களும் உங்களைத் தியாகம் செய்தால் என்ன என்று கேட்பது சரியானதாகவும்படவில்லை.
அதனால் தவிர்த்தேன்’ என்றேன்.
நண்பர் விடுவதாக இல்லை.
‘இல்லை, முன்னணியினருக்கு அவர் சொல்லியிருக்கின்ற யோசனை என்ன என்பதையாவது நீங்கள் சொல்லியிருக்கலாம்’ என்றார்.
அவரின் கோரிக்கையை தவிர்க்க முடியவில்லை அதனால் சுவாமி சங்கரானந்தா என்பவர் எழுதிய அந்தப் பத்தியின் இறுதிப் பகுதியையும் கீழே தருகின்றேன்.
‘மாவீரர் நாளை அரசியல் மயப்படுத்துவதும், பசீர் காக்க போன்ற மூத்த போராளிகளை அசிங்கப்படுத்துவதும், ஏதோ தாங்களே மக்கள் பிரதிநிதிகள் போலவும் தமிழ் தேசியவாதிகள் போலவும் எண்ணம் கொண்டு மற்றவர்களுக்கு துரோகிப் பட்டம் கொடுப்பதுதான் அவர்களின் சில்லறைத்தனமான அரசியலாகும்.
எந்த தமிழ் கட்சிகளுடனும் ஒற்றுமையாக நின்று கேட்கவேண்டியதை கேட்காமல் எதிர்க்க வேண்டியதை எதிர்க்காமல் பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளாமல்,
அரசியல் செய்யும் இவர்கள், சுழற்சி முறையில் ஒருவர் பின் ஒருவராக சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு அதனை தியாக தீபம் திலீபன் ஆகுதியான நல்லூர் வீதியில் ஆரம்பிக்க வேண்டும்…! அப்படி செய்தால், உலகத் தமிழர்களினாலும் இந்தியத் தமிழர்களினாலும் ஈழத்தமிழர்களினாலும்
வெடிக்கும் புரட்சியில் சர்வதேசங்களும் ஆதரவு வழங்க ஒரு நாடு இரு தேசம் அல்ல தனிநாடக தமிழீழம் அடைவது உறுதி ….’ – இப்படி செல்கின்றது அவரின்
கோரிக்கை.
அவரின் கோரிக்கையை இந்த ஊர்க்குருவி ஆதரிப்பதாகவோ, அல்லது அவர்கள் அவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு வரும் என்றோ இங்கே வாதிடப்போவதில்லை.
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, அப்போது இருந்த இருபத்தியிரண்டு எம். பி.க்களும் அத்தகைய போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தாலேயே நிலைமைகள் தலைகீழாக மாறியிருக்கும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணித்தவைவர் ஆனந்தசங்கரி ஐயா அடிக்கடி சொல்வதுதான்
ஞாபகத்திற்கு வந்தது.
அப்போது காணாமல்போனவர்கள் பின்னர் யுத்தம் முடிந்த பின்னரே வெளியே வந்தார்கள்.
ரெலோ எம். பி. சிவாஜிலிங்கமும் சிறீகாந்தாவும் மட்டுமே இந்தியாவில் சென்னையிலும் புதுடிலில்லியிலும் நின்று யுத்தத்தை நிறுத்த கோரிக்கையாவது
விடுத்துக்கொண்டிருந்தார்கள்.
மற்றையவர்கள் எவரையும் காணவே முடியவில்லை.
அப்போது செய்திருந்தால்கூட எதுவும் நடந்திருக்குமோ தெரியவில்லை.!

  • ஊர்க்குருவி.