முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினைச் சேர்ந்த 71 வயதான குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் மயில்குஞ்சன் குடியிருப்பு கைவேலியில் வசித்துவரும் 30 வயதான, கேப்பாபிலவு இராணுவ முகாமில் பணியாற்றும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைவேலி-மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியில் மது அருந்தும் இடத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது 30 வயதான சந்தேகநபர் பொல்லுகளாலும், கோடரியாலும் குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்கதலில் காயமடைந்த குடும்பஸ்தர், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபரான இராணுவத்தில் பணியாற்றும் 30 வயதான நபரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.