-அலசுவது இராஜதந்திரி-
உலகில் உள்நாட்டு யுத்தங்கள் முடிவுக்கு வந்த நாடுகள் அனைத்துமே தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதிலும், அரசியல் ரீதியாக தாம்விட்ட தவறுகளைத்திருத்தி புதிய அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை கட்டியெழுப்புவதிலுமே முனைப்பாக இருக்கின்றன.
ஆனால் இலங்கையில் அரசியல், மற்றும் பொருளாதார ரீதியாக முன்னோக்கிச்சென்று மூன்று தசாப்தகால யுத்தம் ஏற்படுத்திய தவறுகளை சீர்செய்து புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதை விட, பின்னோக்கிச்சென்று அகழ்வாராய்ச்சி என்ற ரீதியல் பழையனவற்றை கிளறுவதையும் இல்லாத, பொல்லாதவற்றையெல்லாம் திரிபுபடுத்தி பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கிவிடும் நடவடிக்கைகளிலேயே ஆட்சியதிகாரங்களில் இருப்போர் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
பௌத்த அடிப்படைவாதம்
கடந்த ஆண்டில் வன்னி மாவட்டத்தில் உள்ள வெடுக்குநாறி மலைக்குன்றிலிருக்கும் சிவன் ஆலயத்தை அகழ்வாராய்ச்சி பிரிவினரிடமிருந்தும், பௌத்த அடிப்படைவாதிகளிடமிருந்தும் காப்பாற்ற அப்பிரதேசவாசிகள் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது.
இதுதவிர திருகோணமலையில் கிண்ணியா வெந்நீருற்று பகுதியில் கூட அங்குள்ள இந்து ஆலயத்தை அகற்றும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஒருவருடத்துக்கு முன்னர் முல்லைத்தீவு பிரதேசத்தில் அங்குள்ள நீராவியடி பிள்ளையார் ஆலய பிரதேசத்துக்கும் சில பௌத்தர்களால் உரிமை கொண்டாடப்பட்டு பிரச்சினைகள் உருவாக்கி விடப்பட்டிருந்தன.
கிழக்கிலங்கையிலும் கால்நடை மேய்ச்சல்தரைகள் தொடர்பாக அண்மைக்காலங்களில் சர்ச்சைகள் தோன்றியிருக்க காணப்படுகின்றன.
யுத்தமற்ற சூழல்
வடக்கு – கிழக்கு மக்கள் தற்போது யுத்தமற்ற ஒரு சுமுக சூழ்நிலை காணப்படுகின்ற நிலையில் தமது பிரதேசங்களின் மூலவளங்கள் தகுந்த முறையில் பயன்படுத்தப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் இந்த எதிர்பார்புகளையெல்லாம் புறந்தள்ளி வடக்கு-கிழக்கு மக்கள் எத்தகைய பிச்சினைகளுக்கு தாம் முகங்கொடுக்க கூடாதென்று எண்ணினார்களோ அத்தகைய பிரச்சினைகளுக்கெல்லாம் தற்போது முகங்கொடுத்து வருவதையே காணமுடிகின்றது.
வடமாகணாத்தில் கூட கேப்பாபிலவு நிலப்பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகின்ற நிலையில் மண்டைதீவு பிரதேசத்தில் கடற்படைமுகாம் விஸ்தரிப்புக்கென நில அபகரிப்பு நடவடிக்கைகளும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொது மக்களின் ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குருந்தூர் மலை விவகாரம்
தற்போது புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில் வைக்கப்பட்டிருந்த திரிசூலம் அகற்றப்பட்டு அங்கே புத்தபகவானின் சிலையொன்று நேற்று முன்தினம் வைக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இந்த சிலை வைப்பு வைபவத்தில் கலந்து கொண்டு அகழ்வாராய்ச்சி பணிகளையும் குருந்தூர் பிரதேசத்தில் ஆரம்பித்து வைத்திருந்தார்.
புத்த பகவானின் சிலைகள் குருந்தூர் மலையில் வைக்கப்பட்டு வழிபாடு செய்வதில் எவ்வித தவறுமில்லை. ஆனால் அப்புதிய சிலை வழிபாட்டுக்குரிய வகையில வைக்கப்படாது ஓர் அரசியல் சின்னமாக வைக்கப்பட்டுள்ளதோடு ஏற்கனவே குருந்தூரில் வைக்கப்பட்டிருந்த சிவனின் சின்னமான திரிசூலம் அகற்றப்பட்டுள்ளதே கவலைக்குரியதாக இருக்கின்றது.
பௌத்தர்கள் சிவன், விநாயகர், விஷ்ணு, முருகன் போன்ற இந்து கடவுள்களையும் வழிபடுவதோடு தென்னிலங்கையில் இருக்கின்ற பௌத்த வழிபாட்டுத்தலங்களில் இந்துக்கடவுள்களுக்கும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடியும்.
ஆனால் வெடுக்குநாறி, குருந்தூர் பிரதேசங்களில் இந்து கடவுள்களது சிலைகள் அகற்றப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தனித்துவம் பாதிக்கப்படும் நிலை
இனநல்லுறவென்பது தத்தமது தாயகப்பிரதேசங்களில் இருக்கின்ற மக்களின் மனங்களைப்புண்படுத்தாது அவர்களது தனித்துவங்களையும் கட்டிக்காத்து தேசிய நீரோட்டத்தில் அம்மக்களையும் ஒன்றிணைப்பதாகவே இருக்க முடியும்.
ஆனால் அவ்வாறில்லாமல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது பிரதேசங்களில் ஒர் ஆக்கபூர்வமான அபிவிருத்திக்காக வடக்கு-கிழக்கு மக்கள் ஏங்கி நிற்கின்ற தருணத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலவே ஆட்சியதிகாரங்களில் இருப்போரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவர்ஹால் நேரு தமது வாழ்நாளில் ஒருதடவை தொழிற்சாலைகளே தாம் வணங்கும் ஆலயங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் யுத்தத்துக்குப்பின்னர் தமது மூலவளங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் யுத்தத்தினால் வெந்து போயிருக்கின்ற தமது உணர்வுகளில் திரிசூலத்தைப்பாய்ச்சுவது போலவே குருந்தூர் மலையிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட திரிசூலம் காணப்படுகின்றது.