27 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அரசு போராட்டத்தை நோக்கி தமிழ் பேசும் மக்களை தள்ளுகிறது- மனோ கணேசன்

தமிழ் பேசும் இலங்கையர்களின் தேசிய இருப்பை அழித்தொழிக்கும், ஒடுக்குமுறை ராஜபக்ச அரசு, தமிழ் மொழியை பேசுகின்ற, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை கடைபிடிக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை ஜனநாயக போராட்டங்களை நோக்கி தள்ளி விட்டுள்ளது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

மனோ எம்.பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

நடப்பு ராஜபக்ச அரசின் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற என்ற கூச்சல் நடைமுறையில், ‘ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம்’ என்பதில் வந்து நிற்கிறது. இதை நாம் இன்று தெளிவாக புரிந்துக்கொண்டுள்ளோம்.

இந்த ஏகபோக கொள்கையை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. இதை இந்நாட்டு அரசும், உலகமும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

உண்மையில் ஒளிவு மறைவு இல்லாமல் இதை இந்த அரசு செய்வதை எண்ணி நாம் மகிழத்தான் வேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று செய்யவில்லையே, இவர்கள்..! இந்நிலையில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டி இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக, இந்நாட்டில் எமது இருப்பை உறுதி செய்துக்கொள்ள நாம் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

நீண்டகாலமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய ஜனநாயக போராட்டம் இப்போது ஆரம்பித்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.

இந்த இலங்கை திருநாடு, ‘பன்மொழி, பன்மத, பல்லின’ அடிப்படையை கொண்ட பன்மைத்துவ நாடு என்ற இலக்கு அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை இந்த போராட்டம் தொடர வேண்டும்.

இந்நாட்டின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பங்கும், இன்றைய இலங்கை நாட்டின் ஆட்சியுரிமை, இறைமை ஆகியவற்றில் தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கின்ற மறுக்கப்பட முடியாத உரிமையும் உறுதிப்படுத்தப்படும்வரை இப்போராட்டம் தொடர வேண்டும்.

தமிழ் பேசும் மக்களையும் உள்ளடக்கியதே இலங்கை நாடு என்ற அடிப்படை உண்மையை சிங்கள முற்போக்கு சிந்தனையாளர்கள் ஏற்றுக்கொண்டு கண் திறக்கும்வரை இப்போராட்டம் தொடர வேண்டும்.

இதுவே ராஜபக்ச ஆட்சியின் ‘ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே மொழி’ என்ற கொள்கைக்கு உரிய தர்க்கரீதியான அரசியல் பதிலாகும்.

இந்த ஜனநாயக போராட்டத்துக்கு எமது ஆதரவை நல்குகிறோம். ஜனநாயக போராட்ட களத்தில் நிச்சயமாக நாம் கரம் கோர்ப்போம் எனத் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles