மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாத்திரம் கடந்த 45 மணி நேரத்தில் 47 சென்டி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. பல வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை பெருநகர் பொலிஸார் அறிக்கையில், புதுவண்ணாரப்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் கீழுள்ள பிளாட்பாரம் அருகே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 70 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
எஸ்பிளனேடு ஸ்கொயர் சாலை ஆவின் பூத் அருகே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பத்மநாபன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
பெசன்ட் நகரில் மரம் விழுந்து முருகன் என்பவர் உயிரிழந்தார்.
பட்டினம்பாக்கம் மாநகர போக்குவரத்து கழக டிப்போ அருகே இருந்து மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத 60 வயது பெண்ணின் சடலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
துரைப்பாக்கம் பாண்டியன் நகரில் கணேசன் என்ற 70 வயது முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நொச்சிக்குப்பம் எல்லையம்மன் கோவில் தெருவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பரத் என்பவர் உயிரிழந்துள்ளார்.
சூளைமேடு மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பாடசாலை வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரில், அங்கு பாதுகாவலராக பணியாற்றி வந்த செல்வம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோட்டூர்புரம் மாநகராட்சி பாடசாலை நிவாரண முகாமில் தங்கி இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த மிராஜுல் இஸ்லாம் என்ற 19 வயது இளைஞர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.