இலங்கையின் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவிற்குள் ஒரு தலைமைத்துவ மோதல் மெதுவாக கருக்கொள்கின்றதா? இவ்வாறானதொரு கேள்வி சமீப நாட்களாக மெதுவாக எட்டிப்பார்க்கின்றது.
அண்மையில் தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச லங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், கட்சியின் தலைமைத்துவம் அதன் வெற்றிக்கு காரணமானவருக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும் என்றவாறானதோர் அபிப்பிராயத்தை தெரிவித்திருந்தார்.
இதனை கடுமையாக ஆட்சேபித்திருந்த பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், விமல் வீரவன்சவிற்கு கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் பேசுவதற்கு எவ்வித உரிமையுமில்லை – அவரது கட்சியான தேசிய சுதந்திர முன்னணி தேசியளவில் இரண்டு லட்சம் வாக்குகளைக்கூட பெறமுடியாத கட்சி.
எனவே, விமல் தனது கருத்திற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்தே தலைமைத்துவம் தொடர்பான சர்ச்சையொன்று பொதுஜன பெரமுனவிற்குள் ஏற்பட்டிருக்கின்றது. மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை அகற்றும் நோக்கிலேயே இவ்வாறானதொரு சூழ்ச்சி இடம்பெறுவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.
இவற்றின் விளைவாக, ஆளும் பொதுஜன பெரமுன, தலைமைத்துவம் தொடர்பான ஒரு சொற்போருக்குள் சிக்குப்பட்டிருக்கின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜக்கிய தேசிய கட்சிக்குள் இடம்பெற்ற தலைமைத்துவ இழுபறியின் காரணமாகவே ஜக்கிய தேசிய கட்சி வீழ்சியுற்றது. இதன் விளைவாக ஜக்கிய மக்கள் சக்தியென்னும் புதிய எதிரணி உதயமானது.
தலைமைத்துவ பிரச்னையின் காரணமாகவே சிறிலங்கா சுதந்திரக் கட்சி வீழ்ச்சியுற்றது. தற்போது பொதுஜன பெரமுனவிற்குள் அவ்வாறானதொரு விவாதம் கருக்கொள்கின்றது.
இது, ஆளும் தரப்பிற்குள் எவ்வாறான அதிர்வுகளை ஏற்படுத்துமென்பதை பொறுத்திருந்துதான் நோக்க வேண்டும்.
பொதுஜன பெரமுனவை பொறுத்தவரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதான் அதன் தலைவராக இருக்க வேண்டும். ஆனால், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவே தற்போது தலைவராக இருக்கின்றார்.
அதிகாரமென்று நோக்கினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதான் கட்சியை பொறுத்தவரையில் சர்வ வல்லமையுள்ளவர். 20ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் மீளவும் பிரதமர் பெயளரவு பிரதமராகிவிட்டார்.
இவ்வாறானதொரு நிலையில் கட்சியின் முடிவு ஒருவரிடமும், நாட்டின் நிர்வாகம் தொடர்பான தீர்மானமெடுக்கும் முடிவு இன்னொருவரிடமும் இருக்கின்றது. இதனால் நடைமுறையில் சில சிக்கல்கள் இருக்க வாய்ப்புண்டு.
ஆனால், மேற்படி தலைமைத்துவம் தொடர்பான விவாதங்களில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எந்தவோர் அப்பிராயத்தையும் தெரிவிக்கவில்லை. விமல் வீரவன்சவின் கட்சி சிறியதாயினும் தென்பகுதி சிங்கள மக்கள் மத்தியில் வீரவன்ச போன்றவர்களின் குரல்கள் கனதிமிக்கவை.
அதேபோன்றுதான் பிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்பன்பில போன்றவர்கள் சிறிய கட்சியின் சொந்தக்காரர்கள் என்றாலும்கூட முக்கியமான முடிவுகளின்போது அவர்களது கருத்துக்கள் நாட்டின் முக்கிய தீர்மானங்களில் பாரியளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
கிழக்கு கொள்கலன் முனைய விடயத்திலும் விமல் வீரவன்ச போன்றவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இறுதியில் அவர்களது எதிர்ப்பிற்கு அமைவாகவே முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
விமல் வீரன்ச போன்றவர்கள் பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு போன்றவர்கள். பாம்மை பரமசிவன் கட்டுப்படுத்தாத வரையில், அவர்களை கட்டுப்படுத்த முடியாது.
பாம்புகள் தொடர்ந்தும் அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கும். தற்போது ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவ விவாதம் எதிர்காலத்தில் மேலும் புதிய சச்சரவுகளை ஏற்படுத்தக் கூடும். இதனால் எதிர்பாராத மாற்றங்களும் ஏற்படலாம்.