தமிழ் அரசு கட்சியின் எதிர்காலம்!

0
92

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மகாநாட்டை நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பில் ‘ஈழநாடு’ ஏற்கனவே எச்சரித்திருந்தது – அதாவது, தமிழ் அரசு கட்சியின் உள்விவகாரம் சுமுகமான தீர்வை காணாது விட்டால் நிச்சயம் கட்சிக்குள் பிளவு அதிகரிக்கும் – நிலைமை மோசமடையும்.
இப்போது மீளவும், ஒரு விடயம் தொடர்பில் எச்சரிக்கின்றோம் – அதாவது, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கை ஒரு போட்டிக் களமாக இரண்டு தரப்புகளும் பயன்படுத்துமாக இருந்தால், இலங்கை தமிழ் அரசு கட்சி அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாதளவுக்கு முடங்கக்கூடும்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவானமையைத் தொடர்ந்து இரண்டு அணிகள் உருவாகின.
போட்டியின் மூலம் தலைவரைத் தெரிவு செய்யும் விவகாரம் ஒரு விஷப்பரீட்சையாகவே இருந்தது – இதன் காரணமாகவே முடிந்தவரை இணக்கமான வகையில் ஒருவரைத்தெரிவு செய்யும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது – எனினும், போட்டியிட்ட இரண்டு பேரும் விலகுவதற்கு இணங்காத நிலையில் இறுதியில் கட்சி இரண்டாக பிளவுபட்டிருக்கின்றது. தமிழ் அரசு கட்சி ஒரு பாரம்பரியக் கட்சி என்றாலும்கூட அதனை உருவாக்கிய செல்வநாயகம் காலத்திலேயே கைவிடப்பட்ட கட்சி. விடுதலைப் புலிகளே, மீளவும் அதற்கு உயிரளித்தனர்.
அவர்கள் உண்மையில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத்தான் உயிரளித்திருக்க வேண்டும்.
ஏனெனில், தமிழ் அரசு கட்சியை விடவும் தமிழர் விடுதலைக் கூட்டணிதான் வரலாற்றுரீதியான முக்கியத்துவம் உடைய கட்சி.
எனினும்,ஆனந்தசங்கரியுடனான முரண்பாட்டின் விளைவாக அந்தக் கட்சியின் சின்னத்தை பயன்படுத்த முடியாமல் போனது.
இவ்வாறானதொரு நிலையில்தான், மீண்டும் அரசியல் அரங்குக்கு வந்த தமிழ் அரசுக் கட்சி 2009இற்கு பின்னரான அரசியல் சூழலில் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசாவின் தலைமைத்துத்தின் கீழ் சரியாக வழிநடத்தப்படவில்லை.
தங்களுடைய கதிரைகளை காப்பாற்றுவதற்கான கட்சியாகவே இதனை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
இவ்வாறானதொரு நிலையில்தான் சம்பந்தன் செயல்பட முடியாமல்போன நிலையில் கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டன.
சம்பந்தன் கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சரியான தீர்மானங்களை சரியான தருணத்தில் முன்னெடுக்கவில்லை.
இதன் விளைவாகவே அடுத்த தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள் போட்டி மனோபாவம் அதிகரித்தது.
சுமந்திரனுக்கு அளவுக்கு அதிகமான இடத்தை சம்பந்தன் வழங்கியதால் ஏனையவர்கள் மத்தியில் அதிருப்திகள் ஏற்பட்டன.
தங்களின் முக்கியத்துவம் தொடர்பில் அவர்கள்மத்தியில் கேள்விகள் ஏற்பட்டன.
இதன் விளைவுகளே தற்போது கட்சி எதிர்கொண்டுள்ளது. தற்போதுள்ள நிலையில், கட்சி சட்டரீதியான சவாலை எதிர்கொண்டுள்ளது.
கட்சியின் பிரச்னையை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றிருப்பதானது கட்சியின் இயலாமையையே காண்பிக்கின்றது.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பதவிகளை பெற்றவர்கள் தற்போது தங்களின் அதிகார மோகத்துக்காக மோதிக்கொண்டிருக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் நோக்கினல் தமிழ் அரசு கட்சியின் எதிர்காலத்தில் சுமுகமாக நகர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கலாகவே தெரிகின்றன.