தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது குறித்துப் பல தடவைகள் இந்த பத்தியில் எழுதியிருக்கின்றேன்.
எல்லை தாண்டி மீன்பிடிப்பது என்பது இருதரப்பிலும் நடப்பதுதான்.
கடலில் எல்லையைக் கண்டுபிடிப்பது என்பது சாதாரணமானதல்ல.
இதனால் எல்லையை தாண்டுவது என்பது இரு தரப்பிலும் நடந்துவருவது தான்.
ஆனால், இன்று தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது என்று மேலே நான் எழுதியிருப்பது, நாங்கள் எமது கடலில் தடை செய்து வைத்திருக்கும் இழுவைமடி மீன்பிடியில் அவர்கள் ஈடுபடுவதையே. இழுவைமடி மீன்பிடி என்பது மீன்களை மாத்திரமல்ல, மீன்களின் வாழ்விடம், உணவு, உயிர்வாழ்வதற்கான சூழல் என்று அத்தனையையும் வழித்து எடுத்துவிடும்.
இன்று தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவது எதனால்? இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான கடலில் அரைவாசித் தூரம் இந்தியாவுக்கு சொந்தமானதுதானே.
ஏன் அவர்கள் அங்கிருந்து இங்கு வந்து மீன் பிடிக்கிறார்கள்?.
அவர்களின் கடலை அவர்கள் இந்த இழுவைமடி மீன்பிடியின் மூலம் நிர்மூலம் செய்துவிட்டார்கள்.
இப்போது அவர்களின் கடல்களில் மீன்கள் வாழக்கூடிய நிலைமையையே இல்லாமல் செய்துவிட்டார்கள்.
அதனால் தான் அவர்கள் இப்போது நமது கடலுக்குள் நுழைகின்றார்கள்.
கடந்த முப்பது ஆண்டுகால யுத்தம் நமது மீனவர்கள் கடலில் தொழிலுக்கு செல்லவில்லை.
மீன்கள் வசதியாக நமது கடலில் வாழ்ந்து வருகின்றன.
நாம் நமது கடலில் இழுவைமடி மீன் பிடியை தடை செய்து வைத்திருப்பதும் நமது கடல் மீன்வளம் குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று. அதனால்தான் அவர்கள் – தமிழக மீனவர்கள் இழுவைமடி படகுகளுடன் வந்த நமது கடல் வளங்களை அள்ளிச் செல்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து அனுமதித்தால் நமது கடலையும் இந்தியக் கடல்போல சுத்திகரிப்பதற்கு அதிக காலம் தேவையில்லை.
அவர்கள் நூற்றுக் கணக்கான இழுவைமடி படகுகளுடன் வந்து தினமும் அள்ளிச் செல்வார்கள்.
இதனால் தான் அதனை அனுமதிக்க நமது மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் இழுவைமடி மீன்பிடியில் ஈடுபடும் படகுகள் நூற்றுக்கணக்கானவை ஒரு சில தமிழக அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை.
அவற்றில் மீன் பிடிப்பதற்காக இங்கு வருபவர்கள் சாதாரண தொழிலாளர்கள் தான்.
அதுதவிர, இதுவே மறுபக்கத்தில் இருந்தால் நமது மீனவர்கள் அப்படியொரு மீன்பிடியில் ஈடுபட்டால் அதனை தமிழக மீனவர்கள் அனுமதித்திருப்பார்களா என்றும் கேட்காமல் இருக்கமுடியவில்லை.
அதுவல்ல, இன்று நாம் பேச வருவது: ‘இந்தியத் தரப்பிலிருந்து இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் ஏற்படுத்தப்படுமாக இருந்தால் நான் அமைச்சரவையில் இருந்து இராஜிநாமா செய்துவிட்டு எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து கடலில் எதிர்ப்புப் போராட்டம் நடத்துவதற்கு தயாராக உள்ளேன்’ என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதுமே டக்ளஸ் தேவானந்தாவை மீன்பிடித்துறை அமைச்சராக நியமித்தது எதற்காக என்பது நாம் ஆராய்ச்சி செய்து அறிய வேண்டிய விடயம் அல்ல.
மீன் பிடித்துறை என்பது இலங்கையின் உயிர்நாடி.
கடலால் சூழப்பட்ட இலங்கையில் கரையோரப் பகுதி முழுவதுமே மீனவர்களின் வாழ்விடம்.
அத்தகைய முக்கியத்துவம்வாய்ந்த அமைச்சு, டக்ளஸூக்கு கொடுக்கப்பட்டது, அவர் ஒரு சிரேஷ்ட அமைச்சர் என்பதற்கு அப்பால், இலங்கை – இந்திய மீன்பிடியில் நிலவும் இந்த சர்ச்சையை ஒரு தமிழரைக் கொண்டே கையாள்வதும் நோக்கமாக இருந்திருக்கலாம்.
அவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அவர் நமது கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற எந்த விடயத்தையும் செய்யப்போவதில்லை என்பதும் தெரிந்தது தான்.
அதனையே அவரும் இப்போது பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்.
ஆனால், அவர் சொல்லியிருக்கின்ற அந்தச் செய்தியில் பொதிந்திருக்கின்ற ஒரு தகவலை நமது தலைவர்கள் என்று சொல்பவர்கள் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது தெரியவில்லை.
‘இந்தியத் தரப்பிலிருந்து இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் ஏற்படுமாக இருந்தால்…’ என்றுதான் அவர் சொல்லியிருக்கிறார் என்றாலும், அவர் அதனை ஓர் எச்சரிக்கையாகவே இப்போது சொல்லியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகின்றது.
‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்பது போல, அவர் விடுத்திருக்கின்ற எச்சரிக்கை அவர் புரிந்து கொண்டதுதான்.
அழுத்தம் ஏற்படுமாக இருந்தால் என்று அவர் சொல்வது அப்படியோர் அழுத்தம் ஏற்கனவே வந்து விட்டதோ என்று எண்ணாமல் இருக்கமுடியவில்லை.
இந்தியா இதுபோன்றே தமது தேவைகளை அழுத்தங்கள் மூலம் தொடர்ந்து நிறைவேற்றி வருவது ஒன்றும் இரகசியமானது அல்ல.
மன்னார் காற்றலை மின் உற்பத்தித்திட்டம் அதற்கு நல்ல உதாரணம்.
இதுகுறித்து – அதாவது நமது மீனவர்களை பாதுகாப்பது குறித்து இப்போதே கவனம் செலுத்த வேண்டும்.
- ஊர்க்குருவி.