காசாவில் ஊட்டச்சத்து குறைபாடால் உயிரிழப்போர் அதிகரிப்பு

0
75

முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான இறுதிக் கட்ட இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றபோதும் காசாவில் தொடர்ந்து மோதல் நீடிப்பதோடு, அங்கு ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து வெடித்த இந்தப் போர் தற்போது ஆறாவது மாதத்தை தொட்டுள்ளது. கடந்த நவம்பரில் இடம்பெற்ற ஒரு வார போர் நிறுத்தத்தை தவிர்த்து காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து இடைவிடாது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 31 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் 70 வீதத்திற்கு அதிகமானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.

மத்திய காசாவில் கடந்த புதன் இரவு தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் குண்டு தாக்குதல்களில் அங்கு குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது நுஸைரத் அகதி முகாம் மற்றும் டெயிர் அல் பலாவில் உள்ள வீடுகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்திய இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் மேலும் 83 பேர் கொல்லப்பட்டு 142 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 38,800 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 72,298 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

கெய்ரோவில் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தத்தில் ஹமாஸ் பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கும் பேச்சுவார்த்தை தொடர்ந்து இடம்பெற்று வந்தபோதும் இஸ்ரேலிய பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவில்லை. எதிர்வரும் மார்ச் 10 அல்லது 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ரமழான் மாதத்திற்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கே முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் இழுபறிகள் நீடித்து வருகின்றபோதும், உடன்படிக்கை ஒன்று இன்னும் சாத்தியமாக உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

‘தடைகள் கடக்க முடியாததல்ல என்றும் உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்றும் நாம் தொடர்ந்து நம்புகிறோம். எனவே அதற்காக நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறோம்’ என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர், வொஷிங்டனில் தெரிவித்தார்.

இந்நிலையில் பீஜிங்கில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியதாவது, ‘இது மனித குலத்தின் அவலம் என்பதோடு இந்த மனிதாபிமான நெருக்கடியை நிறுத்த முடியாவிட்டால் 21 ஆம் நூற்றாண்டில் இன்றைய நாகரிகத்தின் அவமானம்’ என்றார்.

வரலாற்று ரீதியாக பலஸ்தீன ஆதரவு போக்குடைய சீனா, காசாவில் போர் நிறுத்தத்தை கோரி வருகிறது.

‘அவசர போர் மற்றும் மோதலை நிறுத்துவதற்கு முன்னுரிமை அளித்து, அவசர தார்மீக பொறுப்பு ஒன்றாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு சர்வதேச சமூகம் அவசரமாக செயற்பட வேண்டும்’ என்று வாங் யீ வலியுறுத்தினார்.

இந்தப் போர் காசாவில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தி 2.4 மில்லியன் மக்கள் தொகையில் அதிகப் பெரும்பாலானவர்களை தமது வீடுகளில் இருந்து வெளியேற்றி பாரிய மனிதாபிமான நெருக்கடி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகாரித்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு கூறியிருந்தது. இவர்களில் பாதி அளவானவர்கள் குழந்தைகளாவர்.

காசாவின் வடக்கு பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகள் மாத்திரமே கிடைத்திருக்கும் சூழலில் அங்கு பட்டினி பேரழிவு மட்டத்தை எட்டி இருப்பதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது

‘குழந்தைகள் பட்டினி தொடர்பான நோய்களால் இறப்பதோடு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று அந்த அமைப்பு குறிப்பிட்டது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 15 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாகவும் அவர் காசா நகரின் அல் ஷிபா மருத்துவமனையில் உயிரிழந்திருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சு கூறியது.

இந்த அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா கூறியதாவது, ‘வடக்கு காசாவில் பஞ்சம் உயிர் ஆபத்து மட்டத்தை எட்டி இருப்பதோடு காசாவுக்கு மேலும் உதவி மற்றும் மருந்து விநியோகங்கள் கிடைக்காதபட்சத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்கக் கூடும்’ என்றார்.

போரினால் இடம்பெயர்ந்தவர்களால் நிரம்பியுள்ள தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஐ.நா அகதி நிறுவன அலுவலகம் ஒன்றுக்கு வெளியில் மாவு பைகளை பெறும் எதிர்பார்ப்புடன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

‘அவர்கள் தரும் மாவு போதுமானதாக இல்லை’ என்று இடம்பெயர்ந்தவரான முஹமது அபூ ஒதே கூறினார். ‘மாவைத் தவிர சீனி அல்லது வேறு எதனையும் தருவதில்லை’ என்றும் அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்

எகிப்து எல்லையை ஒட்டி இருக்கும் ரபாவில் தற்போது காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமான 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

மறுபுறம் தெற்கு காசாவின் மிகப்பெரிய நகரான கான் யூனிஸின் நகர மத்தியில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெற்றதை அடுத்து பலரும் தமது வீடுகளில் எஞ்சியுள்ளவற்றை காண்பதற்கு அங்கு திருப்பியதாக அங்குள்ள ஏ.எப்.பி. செய்தியாளர் விபரித்துள்ளார்

எனினும் துருப்புகள் வாபஸ் பெறப்பட்டது பற்றி இஸ்ரேலிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

காசாவில் பரந்த அளவில் பட்டினி நிலை ஏற்பட்டிருக்கும் சூழலில் இஸ்ரேலுக்கு எதிராக அவசர நடவடிக்கையை விதிப்பதற்கு சர்வதேச நீதிமன்றத்திற்கு தென்னாபிரிக்கா கடந்த புதனன்று மனுத் தாக்கல் செய்துள்ளது.

காசாவுக்கு உதவிகள் செல்வதை அதிகரிக்கும்படி பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கெமரூனும் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.