விடுதலைப் புலிகளுக்கு பின்னரான கடந்த பதின்நான்கு வருடங்களில், தமிழ் சிவில் சமூக குழுக்கள் அவ்வப்போது தலைநீட்டியிருக்கின்றன.
அரசியல் தலைமைகள் என்போர் நெருக்கடிகளை சந்திக்கும் சந்தர்ப்பங்களில்தான், சிவில் சமூக தலைவர்கள் என்போர் முக்கியத்தும் பெறுகின்றனர்.
தமிழ் சிவில் சமூகம் என்பதன் மூலம், கட்சிசாராத சமூக முக்கியஸ்தர்கள், கருத்துருவாக்கிகள், பேராசிரியர்கள் மற்றும் மதத் தலைவர்கள் என்போர் அடங்குகின்றனர்.
இதில் மதத் தலைவர்கள் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர்.
அவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவதால் அவர்கள் ஒரு விடயத்தை எடுத்துக் கூறும் போது, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதனை செவிமடுப்பார்கள் என்னும் நம்பிக்கை காணப்படுகின்றது.
ஆனால் அது ஒரு கற்பனையான நம்பிக்கை மட்டும்தான்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை ஊடக தளங்களில் அதிகம் பேசப்பட்டது.
இதில் கருத்துருவாக்கிகள் சிலர் முன்னணி வகித்திருந்தனர்.
ஆனால் அதனை நடைமுறையில் வெற்றிகொள்ள முடியவில்லை.
தமிழ் கட்சிகளை ஒரணிப்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கை பல்வேறு தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பலதரப்பட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், அன்றைய சூழலில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக நோக்கப்பட்ட கிறிஸ்தவ மதத்தலைவர்.
அவரை ஒரு கிறிஸ்தவராக எவருமே நோக்கவில்லை.
அந்தளவிற்கு அவர் ஒரு தனி மனித நிறுவனம் போன்று செயல்பட்டார் ஆனால், அவ்வாறான ஒருவரால் கூட தமிழ் கட்சிகளின் தலைவர்களின் தீர்மானங்கள் மீது செல்வாக்குச் செலுத்த முடியவில்லை.
ஆயர் இராயப்பு ஜோசப்பின் கோரிக்கைகளை சம்பந்தன் ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ் சிவில் சமூகம் தங்களை ஒரு பிரதான குரலாக முன்னிறுத்த முயற்சித்தது – அதேபோன்று, தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் உள்ளடக்கி தங்களை ஒரு மக்கள் இயக்கமாக அடையாளப்படுத்த முயற்சித்தது.
ஆனால் இவர்களால் அறிக்கைகளுக்கு அப்பால் பயணிக்க முடியவில்லை.
பதினான்கு வருடகால சிவில் சமூக முயற்சிகள் அனைத்துமே இறுதியில் புஸ்வாணமாகியது.
இவர்களது கோரிக்கைகள் எதனையுமே அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொருட்படுத்தவில்லை.
இங்கு பொருட்படுத்தல் என்றால் என்ன? ஒரு கட்சி அல்லது அக்கட்சியின் தலைவர்கள் என்போர் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளும்போது, அது பொருத்தமானதல்ல என்று சிவில் சமூகங்கள் கூறும் போது, அதனை குறித்த கட்சிகள் ஏற்றுக்கொண்டு தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு மாற்றிக் கொண்டால் மட்டும்தான், குறித்த சிவில் சமூக அமைப்பின் கரிசனையை, அவர்கள் பொருட்படுத்துகின்றார்கள் என்பது பொருளாகும்.
கடந்த பதினான்கு வருடங்களில் சிவில் சமூக குழுக்கள் கூறிய எவற்றையுமே, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்போர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதற்கு என்ன காரணம்?
பதில் இலகுவானது – அதாவது, சிவில் சமூக அமைப்புக்களின் கோரிக்கைகளை கண்டு அரசியல் கட்சிகள் அச்சம் கொள்ளவில்லை – இவர்களால் எங்களை என்ன செய்ய முடியும் என்னும் மனோபாவத்தோடுதான் விடயங்களை கையாளுகின்றனர்.
இதற்கு என்ன காரணம்? – சிவில் சமூக அமைப்புக்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள், வெறுமனே தங்களை, அரசியல் கட்சிகளோடு சுருக்கிக் கொண்டதும் ஒரு பிரதான காரணமாகும்.
மக்களின் சிந்தனையில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய சிவில் சமூக அமைப்புக்கள் எவையும் இல்லை.
தங்களின் தேர்தல் அரசியலுக்கு நெருக்கடிகள் ஏற்படும் என்று எண்ணும் போது மட்டும்தான், அரசியல் கட்சிகள் அச்சம் கொள்ளும்.
இல்லாவிட்டால், சிவில் சமூக அழுத்தங்கள் என்பவை, பத்தோடு பதினொன்றாகவே கழிந்து செல்லும்.
இந்த சவாலை எதிர்கொள்ளும் வகையில் சிவில் அமைப்புக்கள் மக்களை நோக்கிச் செல்லவேண்டும்.
ஊடகங்களின் பலமான ஆதரவை பெறவேண்டும்.
சிவில் சமூகமும் ஊடகங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால், சில மாற்றங்களை சாத்தியப்படுத்த முடியும்.