பணத்துக்காக சுதந்திரக் கட்சியை மைத்திரிபால சிறிசேன காட்டிக்கொடுத்துள்ளார்!

0
44

எவரிடமாவது பணம் இருக்கிறது என்பதற்காகவும், அமைச்சுப் பதவி இருக்கிறது என்பதற்காகவும் அவருக்கு ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க
வாய்ப்பளித்தால் அது நியாயமானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து என்னை நீக்கியமை குறித்து நான் கவலையடையவில்லை.

ஆனால், கட்சிக்கும் எனக்குமிடையிலான பிணைப்பை முற்றாக இல்லாமலாக்கும் வகையில் எனது உறுப்புரிமை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரியால் பறிக்கப்பட்டமை வேதனையளிக்கிறது.

எவ்வாறிருப்பினும் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிமன்றத்தின் ஊடாக நீதி கிடைக்கும் என்று நம்புகின்றேன்.
கட்சியின் அங்கத்தவர் அல்லாத ஒருவர் தற்போது பதில் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

மலைநாட்டு ஒப்பந்தத்தின் மூலமே எமது நாடு காட்டிக் கொடுக்கப்பட்டது.
அதேபோன்று தற்போது மலைநாட்டு பகுதியில் உள்ள ஒருவரால் சுதந்திர கட்சியும் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

அவரே புதிய தலைவருக்கான பெயரை முன்மொழிந்துள்ளார்.
பதில் தலைவராக நியமிப்பதற்கு சுதந்திர கட்சியில் வேண்டியளவு சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆனால், இன்று பணத்துக்காக கட்சி காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
மே தினத்தன்று விஜயதாஸ ராஜபக்ஷவே சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரால் அவ்வாறு தனித்து தீர்மானம் எடுக்க முடியாது.