இப்படியும் நடக்கிறது

0
98

யாழ். பொது நூலகம் யாழ். எம். பி. யோகேஸ்வரனின் இல்லம் ‘ஈழநாடு’ பத்திரிகை அலுவலகம் என்பன சிறீ லங்கா அரச ஆதரவுபெற்ற காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட சில மாதங்களில் கொழும்பில் பொதுநலவாய அமைச்சர்கள் மாநாடு ஒன்று நடைபெற்றது.
அந்த மாநாட்டை தமிழர் விடுதலைக் கூட்டணி பகிஷ்கரிப்பது என்று முடிவுசெய்திருந்தது.
அப்போது இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பதவியில் இருந்தார்.
அதனால் அவர்களின் அந்த பகிஷ்கரிப்புக் கோரிக்கை சர்வதேச அளவில் பேசப்படுகின்ற விடயமாகியிருந்தது.
யாழ். பொதுநூலக எரிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பகிஷ்கரிப்புக்கு, முக்கியமாக பிரிட்டன் ஆதரவு வழங்கியதுடன் அதற்கு ஆதரவாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது.
அந்த மாநாட்டில் உரையாற்றிய அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன தனது மாநாட்டு ஆரம்ப உரையில், பிரிட்டன் வெளிவிவகார அமைச்சரைப் பார்த்து சொன்னார், ‘கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறியாதீர்கள்.
அயர்லாந்தில் நடக்கும் விடயங்களை கவனியுங்கள்.
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட அந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் விசாரணைகளை நடத்துவோம்.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று.
மாநாட்டின் இடைவேளையின் போது, அங்கே கூடியிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் இருந்து மூத்த ஊடகவியலாளர் கிளரன்ஸ் பெர்னாண்டோ ஒரு விடயத்தை சொன்னார்.
ரொய்ட்டர் செய்தி நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியாக இருந்த கிளரன்ஸ் பெர்னாண்டோ, முன்னாள் சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸின் நெருங்கிய உறவினர்.
ஆனந்த திஸ்ஸ டி அல்விஸூம் ஒரு முன்னாள் ஊடகவியலாளர்தான்.
கிளரன்ஸ் சொன்னது இதுதான்: ‘ஜே. ஆர்., இந்த மாநாட்டில் அமிர்தலிங்கம் இல்லை என்ற துணிச்சலில்தான் அப்படிப் பேசினார்.
அமிர்தலிங்கம் இங்கே இருந்திருந்தால், இப்படி பேசிவிட்டு மாநாட்டு மண்டபத்தை விட்டு ஜே. ஆர். வெளியேறியிருக்க முடியாது…’ என்று.
இந்தச் சம்பவத்தை எனக்கு நேற்று ஞாபகப்படுத்தினார், ‘ஈழநாடு மாலி’ என்ற மகாலிங்கசிவம்.
அவர் அப்போது ‘ஈழநாடு’ வின் கொழும்பு பிரதிநிதியாக பணியாற்றிய காலம் அது.
இலங்கையில் விரைவில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் வாக்குகளாக இருக்கப்போகின்றன என்பதையே அனைத்துத் தரப்பினரும் கூறிவருகின்றனர்.
அதனால்தான், வேட்பாளர்களாக போட்டியிடவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் மூன்று வேட்பாளர்களுமே தமிழ் மக்களை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.
ஆனால், அவ்வாறு வருபவர்களும் தமிழ் மக்கள் பற்றியும் அவர்களின் அரசியல் போராட்டங்கள் பற்றியும் தெரிவிக்கின்ற விடயங்கள் மேலே சொன்ன சம்பவத்தை எமக்கு ஞாபகப்படுத்தின.
வடக்குக்கு வந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரனைச் சந்தித்தபோது தெரிவித்த விடயங்கள் குறித்து நேற்று இந்தப் பத்தியில் தெரிவித்திருந்தேன்.
அவர் தெரிவித்திருந்த மற்றுமொரு விடயத்தை சுட்டிக்காட்டிய நண்பர் மாலி, ‘நாற்பது வயதுக்கு குறைந்தவர்கள் எவரும் இனப்பிரச்னை பற்றியோ அதற்கு தீர்வு தேவை என்பது பற்றியோ அக்கறைகொள்ளவில்லை’ என்றவாறும் தெரிவித்திருக்கிறார்.
அதன் அர்த்தம் இந்த வயோதிபர்களின் காலம் முடிந்து விட்டால் இனப்பிரச்னை என்ற ஒன்றே இருக்காது என்பதுதானே.
அதனால்தான் அவர் இப்போது அரசியல் தீர்வு அவசரமில்லை என்பதையும் விக்னேஸ்வரனிடம் சொல்லிச் சென்றிருக்கிறார்.
நமது தமிழ்த் தேசியத் தலைவர்கள் பலர் எற்கனவே ரணிலுடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் என்பது இரகசியமானது அல்ல.
அவர்களைப் பொறுத்தவரை ஏற்கனவே ரணிலுக்கு சில வாக்குறுதிகளையும் வழங்கியிருக்கலாம்.
அதனால்தான் அவர்கள் தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் பகிரங்கமாக அதனை ஆதரிக்க தயக்கம் காட்டிவருகின்றனர் என்பதும் புரிந்து கொள்ளக்கூடியதுதான்.
அதில்கூட தவறு இருப்பதாக யாரும் வாதிடப்போவதில்லை.
ஆனால், ரணில், விக்னேஸ்வரனிடம் சொன்னதுபோல – சில விடயங்களை பகிரங்கமாக சொல்லிச் சென்ற பின்னரும் அவருக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களைக் கேட்கக்கூடிய துணிச்சல் அந்த நமது தலைவர்களுக்கு இனியும் வருமா என்பது தெரியவில்லை.
ரணிலின் பாஷையிலேயே சொல்வதானாலும், அபிவிருத்திதான் தற்போதைய முக்கிய தேவை என்றாலும்கூட அதனை மாகாண நிர்வாகம் ஊடாகவே
செய்யவேண்டியிருக்கும் நிலையில், மேற்கு மாகாணம் நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்வதுபோல ஏனைய மாகாணங்களையும் மாற்ற
வேண்டும் என்று ரணில் முன்னர் ஒருதடவை சொல்லியிருந்தார்.
அவ்வாறு மாகாணங்களை மாற்ற வேண்டும் என்றால், பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்துவது இருக்கட்டும், அதற்கு முதலில் ஏற்கனவே மாகாண சபைகள் இயங்கியதுபோலாவது இயங்கவேண்டும்.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கவேண்டுமே தவிர, ரணில் தனது பிரதிநிதிகளைக் கொண்டு இயக்கவேண்டும் என்பதல்ல.
எனவே, தமிழ் மக்களின் வாக்குகள் தனக்கு தேவை என்று ரணில் கருதினால் ஆகக்குறைந்தது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், பொதுத்தேர்தல் நடக்கின்ற
போதாவது மாகாண சபைகளுக்கும் தேர்தலை ஒன்றாகவே நடத்தவேண்டும்.
அப்படி நடத்துவதற்கு ஏதுவாக, பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக பாராளுமன்றில் சட்டம் இயற்றவேண்டும்.
அதற்காகவே நமது எம். பி. சுமந்திரன் ஏற்கனவே தாக்கல் செய்திருக்கும் தனிநபர் பிரேரணையையே வாக்கெடுப்புக்கு விட்டு சபையில்சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.
மாகாண சபைகளுக்கு முழு அதிகாரத்தை வழங்க முற்பட்டால் அது சிங்கள மக்கள் மத்தியில் தனக்கு கிடைக்கும் ஆதரவை குறைத்துவிடும் என்று வாதிடலாம்.
ஆனால், முன்னர் பல தசாப்தங்களாக இயங்கியதுபோல அதே அதிகாரங்களுடன் என்றாலும் மாகாண சபைகள் இயங்குவதை யாரும் எதிர்க்கப்போவதில்லையே.
இதனை என்றாலும் செய்துவிட்டுத் தான் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்க வரவேண்டும் என்று சொல்கின்ற துணிச்சலாவது நமது தலைவர்களுக்கு வருகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.!

ஊர்க்குருவி.