காசாவில் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டு நான்கு பணயக்கைதிகளை இஸ்ரேலிய படையினர் உயிருடன் மீட்டுள்ள அதேவேளை இந்த நடவடிக்கையின் போது 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேல் மேற்கொண்ட மிகமோசமான இரத்தக்களறியை ஏற்படுத்திய தனியொரு தாக்குதல் இதுவென ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
காசாவின் மத்தியில் உள்ள அல்நுசெய்ரட் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பாலஸ்தீனியர்கள் அதிகளவில் நெருக்கமாக வாழும் இஸ்ரேலிய படையினருக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் அடிக்கடி மோதல் இடம்பெறும் பகுதி இது.
நுசெய்ரட்டில் பொதுமக்கள் வாழும் பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் பணயக்கைதிகள் தொடர்மாடிக்குடியிருப்புகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்
இந்த நடவடிக்கையின் போது இஸ்ரேலிய படையினர் கடும் தாக்குதலை எதிர்கொண்டனர் இதனை தொடர்ந்து அவர்கள் வானிலிருந்தும் தரையிலிருந்தும் பதில் தாக்குதலை மேற்கொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளமை எங்களிற்கு தெரியும் இவர்களில் எத்தனை பேர் பயங்கரவாதிகள் என்பது தெரியாது இஸ்ரேலின் விசேட படைப்பிரிவை சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.’
இந்த தாக்குதல் காரணமாக பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் சந்தை மசூதி பகுதிகளில் ஆண்கள் பெண்கள் சிறுவர்களின் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன என காசாவின் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மீட்கப்பட்ட பணயக்கைதிகளின் பெயர் விபரங்களை வெளியிட்டுள்ள இஸ்ரேல் அவர்களை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் அவர்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் ஏழாம் திகதி நொவா இசைநிகழ்வில் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் இவர்கள் கடத்தப்பட்டனர்.