எதிர்காலத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: கலாநிதி பிரதீபராஜா

0
79

இலங்கையின் அனைத்து பகுதிகளும் எதிர்காலத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பை கொண்டுள்ளன என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

தனது சமூகவலைதளத்தில் இட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்தாhர்.

அண்மைக்காலத்தில் இலங்கையின் கடற்பிராந்தியங்களிலும் நிலப்பகுதிகளிலும் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன.
இவை எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவிலும் நில நடுக்கங்கள் இடம்பெறலாம் என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதலாம்.

அனர்த்தங்கள் தொடர்பான விழிப்புணர்வை சகல பிரஜைகளுக்கும் வழங்க வேண்டும்.

குறிப்பாக வெள்ளப்பெருக்கு, வறட்சி, புயல், சூறாவளி, நிலச்சரிவு, புவிநடுக்கம் தொடர்பான இயற்கை அனர்த்தங்கள் பற்றியும் வீதி விபத்துகள் மற்றும் தீ விபத்துகள் பற்றியும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இவற்றால் ஏற்படும் உயிர் மற்றும்
உடைமை இழப்புக்களை தவிர்க்க முடியும் என பதிவிட்டுள்ளார்.

வவுனியாவில் பதிவான நிலநடுக்கத்துக்கும் வவுனியாவில் நடக்கும் கல் அகழ்வு, குழாய் கிணறு தோண்டுதல் போன்ற செயல்பாடுகளுக்கும் தொடர்புபடுத்தி வெளியிடப்படும் தகவல்களை அவர் மறுத்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான செயல்பாடுகள் வேறு பல பிரச்னைகளை தோற்றுவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.