தங்கப் பதக்கத்தை தக்கவைக்க ஆர்வமில்லாத ஜமைக்க வீராங்க‍னை எலைன் தொம்சன்

0
75

ஜமைக்காவின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனையும் ஐந்து முறை ஒலிம்பிக் சம்பியனானவருமான எலைன் தொம்சன் ஹேரா, பாரிஸ் ஒலிம்பிக்கில் 200 மீற்றர் சம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்காக பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என குறிப்பிடப்படுகிறது. 

எதிர்வரும் 28ஆம் திகதியன்று 32ஆவது வயதை எட்டும் எலைன் தொம்சன், 200 மீற்றர் போட்டிக்கான ஆயத்த பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக இம்முறை பாரிஸ் ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 200 மீற்றர் போட்டியில் பங்கேற்ற மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இம்மாதத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற நியூயோர்க் (NYC) கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியின்போது எலைன் தொம்சன் காயத்துக்குள்ளாகியிருந்தார். எவ்வாறாயினும், பாரிஸ் ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் பங்கேற்பது உறுதியான விடயம் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.54 செக்கன்களில் ஓடி முடித்து உலகின் இரண்டாவது அதிவேக வீராங்கனை என்ற பெயரைக் கொண்டவர் என்ற சிறப்பை எலைன் தொம்சன் கொண்டுள்ளார். இதன் முதலிடத்தில் ஐக்கிய அமெரிக்காவின் பிளோரன்ஸ் க்ரிபித் (10.49 செக்கன்கள்) வகிக்கார். 

மேலும், ரியோ ஒலிம்பிக் 2016, டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆகியவற்றில் பெண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகள் என 2 ஒலிம்பிக் தொடர்களில் 100 மீற்றர் மற்றும் 200 மீ்ற்றர் தொடர்ச்சியாக தங்கம் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.  அத்துடன் 2016 ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற அணியில் இடம்பிடித்திருந்துடன், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இதே போட்டி நிகழ்வில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார்.

தனது முன்னைய பயிற்றுநரரான ஷானிக்கி ஒஸ்போர்னுடன் கடந்தாண்டு நவம்பர் மாதம் விலகிக்கொண்ட எலைன் தொம்சன் தமது சக நாட்டு வீராங்கனையான  ஷெல்லி ஆன்  பிரேசருடன் ரெய்னால்டோ வோல்கொட்டின் கீழ் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 ஜூலை 26ஆம் திகதியன்று ஆரம்பமாகின்றபோதிலும், தடகளப் போட்டிகள் ஆகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பித்து 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது