இருண்ட யுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நாடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவமிக்க சிறந்த தலைமைத்துவத்தால் இன்று ஒளியைக் கண்டுள்ளது. வெகுவிரைவில் வங்குரோத்து நிலையில் இருந்தும் நாடு மீளும். எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்குவதன்மூலம் அபிவிருத்தி யுகத்தை நோக்கி பயணிக்க முடியும் என ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாவதை தடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து செயற்பட்டன. எனினும், எதிரணில் உள்ள எம்.பிக்களுக்கு ஜனாதிபதியின் ஆளுமை தெரியும். அதனால்தான் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவர் அமோக வெற்றிபெற்றார்.
இது சஜித்துக்கும் தெரியும். அதனால்தான் டலஸ் அழகப்பெருமவை பலிகடாவாக்கிவிட்டு, ஜனாதிபதி வேட்பாளர் பதவியை அவர் தக்கவைத்துக்கொண்டார். அடுத்த தேர்தலிலும் சஜித்துக்கு தோல்விதான் ஏற்படப்போகின்றது. ஏனெனில் நாட்டை மீட்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்கதான் என்பது நாட்டு மக்களுக்கு புரிந்துவிட்டது. எனவே, எதிரணிகளின் போலி பிரசாரங்களை நம்பி இரவில் விழுந்த குழிக்குள் பகலில் விழுவதற்கு நாட்டு மக்கள் தயாரில்லை.