விக்கிலீக்ஸ்ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சேயை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துவரவிரும்புகின்றோம் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜூலியன் அசஞ்சே அவுஸ்திரேலியாவில் நீதிமன்ற நடவடிக்கையை எதிர்கொள்ளவுள்ளார் என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம்,இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதால் இது குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமற்ற விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனிற்கான தூதுவர் மூலம் அவுஸ்திரேலியா அசஞ்சேக்கு தூதரக உதவிகளை வழங்கியுள்ளது தூதுவர் ஸ்டீபன் ஸ்மித் அசஞ்சேயுடன் பயணம் செய்கின்றார் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவிற்கான அவுஸ்திரேலிய தூதுவரும் முக்கிய உதவிகளை வழங்குகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலும் எதிர்கட்சி தலைவராக பணியாற்றியவேளையிலும் ஜூலியன் அசஞ்சே விவகாரம் மிக நீண்டகாலத்திற்கு இழுக்கப்பட்டுள்ளது என்ற கருத்தினை நான் கொண்டிருந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்தும் சிறைவைத்திருப்பதால் எந்த பயனுமில்லை நாங்கள் அவரை அவுஸ்திரேலியாவிற்கு கொண்டுவரவிரும்புகின்றோம் எனவும் அன்டனி அல்பெனிஸ் குறிப்பிட்டுள்ளார்.