ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் (LPL) நேற்று கோலாகல ஆரம்ப விழாவுடன் தொடங்குகிறது. கண்டி, பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று மாலை 6.15 மணிக்கு தொடங்கவுள்ள கோலாகல ஆரம்ப விழா வைவத்தின்போது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்து கோடியை அசைத்து எல்.பி.எல். கிரிக்கெட் போட்டியை தொடக்கிவைப்பார்.
ஆரம்ப விழா வைபவத்தில் லங்கா பிறீமியர் லீக்கின் குறியீடு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் க்ளார்க்கும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். ஆரம்ப விழாவில் நடப்பு சம்பியன் கண்டி பெல்கன்ஸ் (நடப்பு சம்பியன் பி லவ் கண்டி), கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ், தம்புள்ள சிக்சர்ஸ், கோல் மார்வல்ஸ், ஜெவ்னா கிங்ஸ் ஆகிய ஐந்து அணிகளினதும் தலைவர்கள், வீரர்கள் ஆகியோரும் கலந்துகொள்வர்.
இந்த வைபவத்தின்போது லங்கா பிறீமியர் லீக் வெற்றிக் கிண்ணத்தை குறியீடு தூதுவர் மைக்கல் க்ளார்க்கிடம் நடப்பு சம்பியன் கண்டி பெல்கன்ஸ் அணித் தலைவர் வனிந்து ஹசரங்க கையளிப்பார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா, லங்கா பிறீமியர் லீக் போட்டி பணிப்பாளர் சமன்த தொடன்வெல ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பிப்பர்.
ஆரம்ப விழாவில் மிக முக்கிய நிகழ்வாக லங்கா பிறீமியர் லீக்கின் உத்தியோகபூர்வ கீதம் அறிமுகப்படுத்தப்படும். ஆரம்ப விழா வைபவத்தில் பல கலைஞர்களும் கலந்து கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். ஆரம்ப விழாவைத் தொடர்ந்து நடப்பு சம்பியன் கண்டி பெல்கன்ஸ் அணிக்கும் தம்புள்ள சிக்சர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியுடன் ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயம் ஆரம்பமாகும். இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.