ரணில் செயலில் காண்பிக்க வேண்டும்

0
99

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்குகொண் டிருந்தார். சம்பந்தன் ஒருபோதும் நாட்டை துண்டாக்கும் முயற் சியை ஆதரித்தவரல்ல என்று குறிப்பிட்டதுடன் கூடவே, அரச மைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரத்தை ஒருபுறமாக வைத்துவிட்டு, ஏனையவற்றை அமுல்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் ரணில் முன்னரும் பேசி யிருக்கின்றார்.

ரணில் கூறுவது உண்மையென்று எவ்வாறு ஒருவர் நம்பமுடியும்? ரணில் தற்போது நிறைவேற்று அதிகாரமுள்ள ஒரு ஜனாதிபதி. அவரால் பல விடயங்களை செய்ய முடியும். ஆனால், அவர் எதனையும் செய்யவில்லை. சம்பந்தனுக்கான அஞ்சலி உரையில் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசும் ரணில் எதற்காக ஒரு புதிய அரசியல் யாப்பை கொண்டுவர முடியுமென்னும் நம்பிக்கையை சம்பந்தனுக்கு வழங்க வேண் டும்?

ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசித்தானே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டனர். அரசமைப்பிலுள்ள விடயங்களை அமுல் படுத்துவதன் ஊடாகத்தான் அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல முடியும் – அதுதான் அரசாங்கத்தின் திட்டம் என்றால் எதற்காக புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசப்பட்டது? ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தில் அரசமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை பொலிஸ் அதிகாரம் உள்ளடங்கலாக அமுல்படுத்துவதற்கான வாய்ப்பு இருந்தது.

பாராளுமன்ற பலத்தைக் கொண்டு சாதாரணமாக அதனைச் செய்திருக்க முடியும். ஆனால், அது பற்றி ஒரு சிறு உரையாடல்கூட நடை பெறவில்லை – ஏன்? இது யாருடைய தவறு? கூட்டமைப்பின் தவறா அல்லது புதிய அரசியல் யாப்புக்கான அரசியல் சூழல் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டே ரணில் தரப்பு சம்பந்தனை ஏமாற்றியதா? ரணில் இன்று கூறும் விட யங்களின் அடிப்படையில்தான் இவ்வாறானதொரு கேள்வியை கேட்க வேண்டியிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றிக்கான வியூகங்களை வகுத்துவரும் ரணில் விக்கிரமசிங்க தற்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசுகின்றார் – அப்போதும் கூட, மிகவும் கவனமாக பொலிஸ் அதிகாரம் இல்லாத அமுலாக்கம் தொடர்பிலேயே பேசுகின்றார். ஏனெனில், பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தென்னிலங்கை கடும்போக்கு தரப்புகள் எதிர்ப்புணர்வுடன் இருக்கின்றன. இத னைக் கருத்தில் கொண்டுதான் ரணில் பொலிஸ் அதிகாரத்தை ஒரு புறமாக வைப்போம் என்கிறார்.

ரணில் எதனையும் பேசலாம். ஆனால், அவர் செய்வார் என்பதை மற்றவர்கள் நம்ப வேண்டுமாயின், முதலில் தனது அதிகாரத்துக்கு உட்பட்ட விடயங்களை அவர் செயலில் காண்பிக்க வேண்டும்.