ரஷ்யா உக்ரைன் மீது முன்னெடுத்த பயங்கர ஏவுகணை தாக்குதலில் தலைநகரில உள்ள குழந்தைகள் மருத்துவமனை கடுமையாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் தலைநகர் கீவ் உட்பட பல பகுதிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகவும் பயங்கரமான தாக்குதலாக பார்க்கப்படுவதோடு, மொத்தமாக இந்த தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் ரஷ்யாவின் இந்த தாக்குதல் குறித்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், குழந்தைகள் உட்பட 37 பேர் பலியாகியுள்ளதாகவும், 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதலில் பிரசவ மையம், குழந்தை பராமரிப்பு மையங்கள், ஒரு வணிக மையம் மற்றும் வீடுகள் என பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. ரஷ்ய பயங்கரவாதிகள் இதற்கு நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் போது ஏவப்பட்ட 38 ஏவுகணைகளில் 30ஐ உக்ரைனிய வான் பாதுகாப்பு படை தடுத்து நிறுத்தியதாகவும், மீதமுள்ளவை தாக்குதல் இலக்கை அடைந்தாகவும் கூறப்படுகிறது.