தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா?

0
95

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை
நிறுத்துவதற்கான முயற்சிகளை தமிழ் சிவில் சமூக அமைப்பு
கள் முன்னெடுத்து வருகின்றன.

எனினும், விடயம் எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. செயல்பாடுகளில் வேகம் மிகவும் குறை வாகவே இருக்கின்றது.

அதேவேளை தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள் – குறிப்பாக, சுமந்திரன் அணியினரும் தங்களின் எதிர்ப்பிலும் வேகத்தை
காண்பிக்கவில்லை.

ஏனெனில், அவர்கள் எதிர்பார்த்தவாறு சிவில் சமூகமும் செயல்பாட்டில் வேகம் காண்பிக்கவில்லை. சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இணைந்து
உறுதியாக செயல்படாத நிலையில் இந்த விடயம் வெற்றிப்
பாதையில் பயணிக்குமா என்னும் கேள்வி உண்டு. இதற்கு
இதுவரையில் தமிழ் மக்கள் பொதுச் சபையாக ஒன்றுபட்டிருப்ப
வர்கள் பதிலளிக்கவில்லை.

சில காரணங்களால் – ஒருவேளை சில கட்சிகள் பின்வாங்கினால் தமிழ் மக்கள் பொதுச் சபையானது தனித்து தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை முன்கொண்டு
செல்லுமா? அதற்கான வலுவுடன் அது இருக்கின்றதா? இந்தக் கேள்வியை மௌனமாக இருப்பதன் மூலம் கடந்து செல்ல முடியாது.

இலங்கைத் தீவு ஒரு சிக்கலான ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றது. இதுவரையில் யார் வெற்றிபெறுவார் என்பதை ஊகிப்பது மிகவும் கடினமாக இருக்கின்றது.

இதேவேளை தேர்தல் நடைபெறுமா என்னும் கேள்வியும் ஒரு மூலையில் உறுத்திக் கொண்டே இருக்கின்றது. இது ரணில் விக்கிரமசிங்க ஆடுவதற்கான இறுதிக் களம். எனவே, அவர் தன்னால் எந்தளவு தூரம் ஆட முடியுமோ அனைத்து வகையான ஆட்டங்களையும் ஆடி முடிக்காமல் ஓயமாட்டார்.

இதில், வெளித்தரப்புகளின் தலையீடுகளையும் அவர் பொருட்படுத்தப் போவதில்லை. அவர்களை தன் பக்கம் சாய்ப்பதற்கு அவர் முயற்சிப்பார் – அதேவேளை, அவர்கள் தன்

பக்கம் சாயாவிட்டாலும்கூட அவர்களை கருத்தில் கொண்டு தனது ஆட்டத்தை அவர் ஆடாமல் இருக்கப் போவதில்லை. இந்த விடயத்தில் இந்தியாவோ, அமெரிக்காவோ ஒரு கட்டத்துக்கு மேல் நேரடி தலையீடுகளை செய்வதற்கான வாய்ப்பும் இல்லை.
ஏனெனில், அளவுக்கதிகமாக தலையீடு செய்து ஒருவேளை எதிர்பார்த்த பலனை அடையாவிட்டால் பாதகமான விளைவுகள் ஏற்படலாம்.

ரணில் பற்றி வெளித்தரப்புகளுக்கு நன்கு தெரியும். எனவே, ரணிலை பொறுத்தவரையில் வெளித் தரப்புகளை கருத்தில் கொண்டு முடிவுகளை அவர் எடுக்கப் போவதில்லை . மாறாக, தனக்கான இறுதிச் சொட்டு வாய்ப்பையும் உச்சமாக பயன்படுத்தும் தந்திரங்களையே அவர் புரிவார்.

இந்தப் பின்புலத்தில் சிந்தித்தால் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு வெளித்தரப்புகள் விரும்பக்கூடிய விடயமாக இருக்கப் போவதில்லை.

அதனை அவர்கள் நேரடியாகக் கூறாவிட்டாலும்கூட இதுதான் உண்மை நிலைமை. எனவே, எவர் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும்கூட நாங்கள் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் என்னும் அறிவிப்பை தமிழ் மக்கள் பொதுச் சபையாக ஒன்றுபட்டிருப்பவர்கள் விரைவாக வெளிப்படுத்த வேண்டும்.