நாட்டை ஊடறுத்து வீசும் பலத்த காற்றுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டில் ஏனைய பிரதேசங்களில் இடைக்கிடையே காற்று மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.