அநுர குமார திஸநாயக்கா புலம்பெயர்ந்த சிங்கள மக்களை தொடர்ந்தும் சந்தித்து வருகின்றார். இவ்வாறு சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப் பங்களிலும் நாங்கள்தான் உங்களுக்கான ஒரேயொரு தெரிவு என்கின்றார் –
அந்த அடிப்படையில் உங்களின் ஆதரவை எங்களுக்கு தர வேண்டும் – எங்களின் வெற்றிக்காக நீங்கள் ஒன்றுதிரள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றார். இந்தப் பின்புலத்தில் தமிழ் புலம் பெயர் சமூகம் என்ன செய்யப் போகின்றது என்னும் கேள்வி எழுந்திருக்கின்றது.
தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி அணிதிரளப் போகின் றதா அல்லது தமிழ்ப் பொது வேட்பாளரை தோல்வியுறச் செய்யப் போகின்றதா? 2009இற்கு பின்னரான, கடந்த பதினைந்து வருடங்களில் தமிழ் மக்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய அரசியல் செயல் பாடுகள் எதனையும் களத்திலும் புலத்திலும் மேற்கொள்ள முடியவில்லை.
அவ்வாறான முயற்சிகள் தொடர்பில் சிலர் பேசியபோதிலும்கூட, அதனை அடுத்த கட்டத்துக்கு அவர்களால் கொண்டு செல்ல முடியவில்லை. ஆனால், முதன்முறையாக தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் நிலைப்பாடு கணிசமான தூரம் வரையில் வெற்றிகரமாக முன்னெடுக் கப்பட்டிருக்கின்றது.
கடந்த காலத்தில் ஒரு தனிநபராக தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டமை தமிழ் அரசியல் சூழலில் பலவீனமாகவே நோக்கப்பட்டது – மக்களும் ஆதரிக்கவில்லை. மக்கள் அவ்வாறான ஒருவரை ஆதரிக்காத போது அவர் முன்வைத்த கோரிக்கைகளின் பெறுமதி என்ன? இது தொடர்பில் புலம்பெயர் அமைப்புகள், அரசியல் செயல்பாட்டாளர்கள் தெளி வாக சிந்திக்க வேண்டும். புலம்பெயர் சூழலில் நினைப்பதை தாயகத்திலுள்ளவர்கள் கூறவேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது.
தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஒரு வெற்றிகரமான நிலைப்பாடாக முன்னெடுப்பதைத் தங்களின் கடமையாக புலம்பெயர் சமூகம் கருத வேண்டும். இரண்டு வழிகளில் புலம்பெயர் சமூகம் இதனை பலப்படுத்த முடியும் – ஒன்று, பலமான நிதி ஆதரவு இரண்டா வது, தங்களின் உறவினர்கள் வழியாக களத்தில் பிரசாரத்தை தீவிரப்படுத்துதல்.
புலம்பெயர்ந்து வாழும் சிங்கள மக்களால் அநுர குமார திஸ நாயக்கவின் வெற்றிக்காக ஒன்றுபட முடியும் – உழைக்க முடியும் என் றால் ஏன் தமிழ் புலம்பெயர் சமூகத்தால் முடியாது? யூத ‘டயஸ்போறா’ வுக்கு பின்னர், ஒப்பீட்டு அடிப்படையில் தமிழ் டயஸ்போறாவுக்கு ஒரு சர்வதேச முகமுண்டு. தற்போது அவ்வாறானதொரு முகம் எங்களுக்கு இருக்கின்றது என்பதை நிரூபிப்பதற்கான சூழல் உருவாகியிருக்கின்றது.
இதனை புலம்பெயர் சமூகம் ஒரு சமூகமாக நிரூபிக்கத் தவறினால் புலம் பெயர் சூழலிலிருந்து இதுவரையில் கூறிவந்த விடயங்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடலாம். தமிழ் பொது வேட்பாளரை நோக்கி தமிழ் வாக்குகளை குவிப்பதில் புலம்பெயர் சமூகத்துக்கு பெரியளவிலான பங்கு உண்டு. இதனை செய்யத் தவறினால் புலம்பெயர் சமூகம் வலுவற்றதாக இருப்பதான தோற்றமே மிஞ்சும். புலம்பெயர் அமைப்புகள் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். செயல்பட வேண்டும்.
இது தமிழ்த் தேசியத்தின் பெயரால் தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி அணிதிரள வேண்டிய காலம். இந்த விடயத்தில் களமும் புலமும் ஒன்றுதிரள வேண்டும். தமிழ்ப் பொது வேட்பாளர் யார் – அவரின் தகுதிகள் என்ன என்பதற்கு அப்பால் அவர் தமிழ்த் தேசிய இனத்தின் குறியீடாக இருக்கின்றார் என்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். இனத்தின் குறியீட்டை நோக்கி, எவ்வாறு மக்களை அணிதிரட்டுவது – அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் – இந்தக் கேள்விகள் மட்டுமே புலத்தில் இருக்க வேண்டும்.