தமிழ் அரசு கட்சியின் தோல்வி

0
86

வடக்கு, கிழக்கில் பல பகுதிகளிலும் சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்தமைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தீர்மானம்தான் காரணம்(?) சுமந்திரன் மற்றும் சாணக்கியனும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபட்டனர். தமிழ்ப் பொது வேட்பாளரை தோற்கடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இவ்வாறானதொரு பின்புலத்தில் தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கைக்கு அமைவாகத்தான் தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவை ஆதரித்தார்கள் என்னும் கதையொன்றை தமிழ் அரசுக் கட்சியின் ஓர் அணியினர் கூறிவருகின்றனர் – இது உண்மையா? முதலில் தமிழ்ப் பொது வேட்பாளரை தமிழ் மக்கள் தோற்கடிக்கவில்லை.

ஆனால், பெருவாரியாக வாக்களிக்கவில்லை. தேர்தல்களில் இது சாதாரணமான ஒன்றுதான். ஏனெனில், மிகவும் குறுகிய காலத்தில் இவ்வாறானதொரு புதிய முயற்சியை வெற்றிகரமான முயற்சியாக்குவது மிகவும் சவாலானது. எனினும், தமிழ்ப் பொது வேட்பாளரை தமிழ் மக்கள் கணிசமாக ஆதரித்திருக்கின்றனர். சஜித் பிரேமதாஸவை ஆதரித்த மக்கள் இப்போது கவலைப்படு வதையும் ‘ஈழநாடு’ அறியும். பலர் அவ்வாறு எங்களிடம் கூறு கின்றனர். வெற்றிபெறக்கூடிய ஒருவர் என்று நினைத்துதான் நாங்கள் ஆதரித்தோம் – தோல்வியடைவார் என்று தெரிந்திருந்தால் பொது வேட்பாளருக்குத்தான் வாக்களித்திருப்போம் என்பதே பலருடைய கவலையாக இருக்கின்றது.

இங்கு கேட்க வேண்டிய கேள்வி வேறு. அதாவது, தோல்வியடையப் போகும் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கு மாறு கூறியவர்களின் பதில் என்ன? தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது பயனற்றது என்றால் சஜித் பிரேமதாஸவுக்கு வழங் கப்பட்ட தமிழ் வாக்குகளின் பெறுமதி என்ன? இதற்கு சுமந்திரனும் சாணக்கியனும் பதிலளிப்பார்களா? இனியாவது இவர்கள் திருந்த வாய்ப்பு உண்டா? முன்னைய மூன்று தேர்தல்களின்போதும் ராஜபக்ஷக்களுக்கு எதிராக வாக்களித்தல் என்பதே பிரதான விடயமாக இருந்தது. அப்போது, ஒப்பீட்டடிப்படையில் ஒருவரை விடவும் இன்னொருவர் பரவாயில்லை என்னும் அடிப்படையில்தான் தமிழ் மக்களின் வாக்குகள் பிரயோகிக்கப்பட்டன. ஆனால், இம்முறை தேர்தல்களம் அப்படியான ஒன்றாக இருந்திருக்கவில்லை. நிலைமைகளை துல்லியமாகக் கணிக்கக்கூடியதாக இருந்தது. மூன்று மாதங்களாக வெளிவந்த அனைத்து கணிப்புகளுமே அநுரகுமார திஸநாயக்கவுக்கு சாதகமாகவே இருந்தன. அவர் வெற்றிபெறுவதற்கான சூழலே மிகவும் பிரகாசமாக இருந்தது.

ஆனால், இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ் அரசுக் கட்சி எதற்காக சஜித் பிரேமதாஸவை ஆதரித்தது? இதற்கு பின்னாலுள்ள திரைமறைவு இரகசியம் என்ன? ஒன்றில் வெற்றி பெறக்கூடியவரை ஆதரிப்பது என்றால் அநுரகுமார திஸநாயக்கவுக்குத்தான் தமிழ் அரசுக் கட்சி ஆதரவளித்திருக்க வேண்டும். தேர்தல் மேடைகளில் இனவாதம் கோலோச்சவில்லை என்று சுமந்திரனே கூறியிருக்கின்றார்.

அது உண்மையாயின், தமிழ் அரசுக் கட்சி வெற்றிபெறப் போகும் ஒருவரை ஆதரிப்பதன் மூலம்தானே தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கான தீர்வு தொடர்பில் பேச முடியும். பின்னர் எதற்காக தோல்வியடையப் போகும் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முட்டாள்தனமான முடிவை எடுத்து தமிழ் மக்களை குழப்பியது? உண்மையில், தமிழ் அரசுக் கட்சியின் அறிவிப்பால் தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கவில்லை. மாறாக, சஜித் வெற்றி பெறக்கூடிய ஒருவர் என்று தவறாகப் புரிந்து கொண்டமையின் காரணமாகவே தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்திருந்தனர். சஜித்தை ஆதரிக்கும் முடிவில் தமிழ் அரசுக் கட்சி படுதோல்வி அடைந்திருக்கின்றது. அத்துடன், அரசியலை கணித்து அதற்கு ஏற்ப முடிவுகளை எடுக்கத் தெரியாத கற்றுக்குட்டிகளாகவும் தமிழ் அரசுக் கட்சியினர் இருந்திருக்கின்றனர் என்பதும் வெள்ளிடைமலை.