மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரின் சுழற்சிகளில் நியூஸிலாந்து சிக்கித் திணறியதால் இந்தியாவுக்கு சாதகமான நிலை உருவாகியுள்ளது.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் 28 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த நியூஸிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் ஒரு விக்கெட் மாத்திரம் மீதம் இருக்க நியூஸிலாந்து 143 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.
நியூஸிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் வில் யங் 51 ஓட்டங்களையும் க்ளென் பிலிப்ஸ் 26 ஓட்டங்களையும் டெவன் கொன்வே 22 ஓட்டங்களையும் டெறில் மிச்செல் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் சுந்தர் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை 4 விக்கெட்கள் இழப்புக்கு 86 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து இந்தியா, சகல விக்கெட்களையும் இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஷுப்மான் கில் 90 ஓட்டங்களையும் ரிஷாப் பான்ட் 60 ஓட்டங்களையும் பெற்றதுடன் 5ஆவது விக்கெட்டில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்மத்திய வரிசையில் வொஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழக்காமல் 38 ஓட்டங்களைப் பெற்று முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை முன்னிலையில் இட்டார்.
இந்த மூவரை விட ஆரம்ப வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் 30 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் 103 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.