கடந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சட்டத்துக்கு முரணாக மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதன் மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கண்டியில் மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் இருவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க முன்னாள் மதுவரி ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 39 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26ஆம் திகதிக்கும் தேர்தல் நடைபெற்ற செப்டெம்பர் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பிரதிவாதிகள் சட்டவிரோதமாகப் பல மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதாக மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.