கல்வித் தகைமையும் அரசியலும்

0
76

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைமையில் பதவியேற்றிருக்கும் புதிய அமைச்சரவை அதன் கடமைகளில் இறங்கியிருக்கிறது. தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் எந்தளவுக்கு பிரமாண்டமான ஆணையை பாராளுமன்ற தேர்தலில் வழங்கினார்களோ அதேயளவுக்கு அரசாங்கத்திடம் பிரமாண்டமான எதிர்பார்ப்புக்களையும் கொண்டிருக்கிறார்கள்.

உடனடியாகவே அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றிவிட முடியாது. அதற்கு கணிசமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். நாடு வங்குரோத்து நிலையை அடைவதற்கு காரணமான முன்னைய அரசாங்கங்களின் தவறுகளில் இருந்து முறையான படிப்பினைகளைப் பெற்று ஊழல் மோசடிகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் இடமளிக்காமல் புதிய அமைச்சரவை செயற்படும் என்ற நம்பிக்கையையும் மக்கள் கொண்டிருக்கிறார்கள்.

முன்னைய அரசாங்கங்களில் அமைச்சர்களாக இருந்தவர்களில் பலர் அரசியலையே தொழிலாகக் கொண்டவர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் உயர்ந்த கல்வித் தகைமைகளை கொண்டவர்களாக இருந்தபோதிலும், கணக்கில் எடுக்கத்தக்க கல்வித்தகைமை இல்லாத உறுப்பினர்களின் செயல்பாடுகளில் இருந்து அவர்களில் பலரின் செயல்பாடுகளில் பெரிதாக வேறுபாட்டைக் காணக்கூடியதாக இருக்கவில்லை.

இத்தகைய பின்புலத்தில், புதிய அமைச்சரவை உறுப்பினர்களில் அதிகப் பெரும்பானமையானவர்கள் உயர்ந்த கல்வித்தகைமைகளை கொண்டவர்களாகவும் குறிப்பாக பல்கலைக்கழக கல்விமான்களாகவும் துறைசார் நிபுணர்களாகவும் இருப்பது பெருமகிழ்ச்சியை தருகிறது. 21 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் 13 பேர் பாராளுமன்றத்துக்கு புதுமுகங்கள். ஆனால், அவர்களின் கல்வித் தகைமைகளை நோக்கும்போது இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத அளவுக்கு மிகவும் தகைமைவாய்ந்த உறுப்பினர்களை பெருமளவில் கொண்டதாக புதிய அமைச்சரவையே விளங்குகிறது எனலாம்.

அறியக் கூடியதாக இருக்கும் தகவல்களின் அடிப்படையில் நோக்கும்போது மூவரைத் தவிர ஏனைய அமைச்சர்கள் பல்கலைக்கழக கல்விமான்களாகவும் துறை சார் நிபுணர்களாகவும் இருக்கிறார்கள். இலங்கையில் மார்க்சிய வேர்களைக் கொண்ட இடதுசாரி கட்சியொன்று இலங்கையில் பாராளுமன்ற பாதையூடாக அதிகாரத்துக்கு வந்திருப்பது இதுவே முதற்தடவை. தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவை (ஜே.வி.பி.) பொறுத்தவரை, பழைய பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளைப் போன்று வெறுமனே பாராளுமன்ற பாதையில் மாத்திரம் நம்பிக்கை வைத்து அதன் அரசியல் பயணத்தை தொடங்கிய இயக்கம் அல்ல.

ஜே.வி.பி. அதன் சுமார் ஆறு தசாப்த கால அரசியல் பயணத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு ஆயுதக் கிளர்ச்சிகளை நடத்தி பயங்கரமான அடக்குமுறை அனுபவங்களுக்குப் பிறகு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து இன்று சகல பிரதான அரசியல் கட்சிகளையும் கிரகணம் செய்து கொண்டு மக்களின் மகத்தான ஆணையுடன் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கிறது. மூன்று தசாப்தங்களாக ஜே.வி.பி. ஜனநாயக அரசியலில் இருக்கின்ற போதிலும், கடந்த இரு ஜனநாயக தேர்தல்களின்போதும் அதன் வன்முறைக் கடந்தகாலத்தை நினைவுபடுத்துவதில் பிரதான கட்சிகள் எனப்படுபவை தீவிரமாக ஈடுபட்டிருந்தன.

ஆனால், மக்கள் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஜனாதிபதி தேர்தலில் திஸநாயக்கவுக்கு வழங்கிய வாக்குகளையும் விட கூடுதலான அளவுக்கு அமோகமாக பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளை அளித்திருக்கிறார்கள். தொழிலாளர் வர்க்க புரட்சிபற்றி பேசிய இடதுசாரி கட்சி ஒன்று அரசாங்கத்தை அமைக்கிறதென்றால், அதில் பெரும்பாலும் மக்கள் மத்தியில் அரசியல் வேலை செய்தவர்களும் தொழிற்சங்கவாதிகளுமே அமைச்சர்களாக இருப்பார்கள் என்ற எண்ணமொன்று பொதுவெளியில் இருக்கும்.

ஆனால், அதற்கு முற்றிலும் முரணாக ஜனாதிபதி திஸநாயக்க தலைமையிலான அரசாங்கம் உயர்ந்த கல்வித்தகைமைகளை கொண்டவர்களை அதிகமாகக் கொண்ட அமைச்சரவையுடனானது என்று வரலாறு படைத்திருக்கிறது. ஒக்ஸ்பேர்ட் பட்டதாரிகளான தலைவர்கள் கடந்த காலத்தில் அமைத்த அமைச்சரவையில் கூட தற்போதைய அமைச்சரவையைப் போன்று அதிகம் கல்விமான்கள் இருந்ததில்லை.