ரூ. 135 கோடியை உடன் வழங்க வேண்டும்; பங்களாதேஷூக்கு இந்தியா நெருக்கடி!!!

0
19

மின்சாரம் பெற்றதற்கான 135 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு பங்களாதேஷ் அரசுக்கு இந்தியாவின் திரிபுரா மாநில அரசு நெருக்கடி கொடுத்துள்ளது.

பங்களாதேஷில் இந்தியாவுக்கு எதிரான விரோதப் போக்கு அதிகரித்து வருகிறது. அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் தாக்கப்படுவதுடன், கோவில்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இஸ்கான் கோவிலின் குரு சின்மயி கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு, இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் கைதை கண்டித்து மேற்கு வங்க மாநிலத்தில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், டாக்கா வழியாக செல்லும் அகர்தலா-கொல்கத்தா பேருந்து பங்களாதேஷின் பிரம்மன்பாரியா மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை தாக்குதலுக்குள்ளானது.

ஒரு கும்பல் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை அச்சுறுத்தியதுடன், இந்தியாவுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பியது. இதன் தொடர்ச்சியாகவே, நிலுவையில் வைத்துள்ள 135 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துமாறு பங்களாதேஷீக்கு திரிபுரா அரசு நெருக்கடி கொடுத்துள்ளது.(எ)

இதுகுறித்து திரிபுரா மாநில மின்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத் கூறுகையில், “என். டி. பி. சி. நிறுவனத்துடன் செய்து கொண்ட மின் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலமாக பங்களாதேஷூக்கு தேவையான மின்சாரத்தை திரிபுரா விநியோகம் செய்து வருகிறது. ரூ. 135 கோடி மின் நிலுவை வைத்திருந்த போதிலும் அது தொடர்ச்சியாக பணப்பட்டுவாடாவை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது முழு நிலுவையையும் திரும்பச் செலுத்த கோரப்பட்டுள்ளது. ஒவ்வொரு யூனிட் மின்சாரத்துக்கும் பங்களாதேஷிடம் இருந்து ரூ. 6.65 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது, உள்ளூர் இணைப்புகளின் மூலம் பெறப்படும் கட்டணத்துடன் ஒப்பிடும்போது வரம்பு மீறாத கண்ணியமான கட்டணமாகவே உள்ளது”- என்றார்.

நடப்பாண்டு மே மாதத்தில் ரூ.100 கோடி நிலுவைக்காக பங்களாதேஷூக்கான மின்சார விநியோகத்தை திரிபுரா மாநில மின்சார கழகம் நிறுத்தியது.

கடந்த ஓராண்டாகவே பங்களாதேஷ் குறித்த நேரத்தில் மின் நிலுவையை செலுத்தாமல் இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டுள்ளது.