கலாநிதிப் பிரச்னை

0
53

நாடு வங்குரோத்து நிலையிருந்த காலத்தில் அநுர நாட்டை பெறுப்பெடுத்திருக்கின்றார்.நாட்டை முன்கொண்டு செல்லும் போது அவருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. அவர் பல சவால்களை எதிர்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு இப்போது வந்திருக்கும் சோதனையோ முற்றிலும் வித்தியாசமானது. சபாநாயகர் கலாநிதிப் பட்டம் பெற்றவரா – எந்தப் பல்கலைக் கழகத்தில் பெற்றவர் என்னும் கேள்வியை முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கலாநிதி சர்ச்சை எழுந்தது. இறுதியில் சபாநாயகர் கற்ற தாகக் குறிப்பிட்டப்பட்ட பல்கலைக்கழகம் அதனை மறுத்துவிட்டது. எதை வைத்து அநுரவுடன் முட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்த கதையாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது நிதியமைச்சர் பெயருக்கு முன்னாலுள்ள கலாநிதிப்பட்டமும் அகற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் கலாநிதிகளுக்கு இது சோதனைக் காலம்தான் ஏனெனில் தங்களை கலாநிதிகள் என்று குறிப்பிட்டுவரும் பலர் உண்மையிலேயே கலா நிதிகள்தானா என்னும் கேள்வி எழுந்திருக்கின்றது. ஆனால், இங்குள்ள பிரச்னை கலாநிதி பற்றி ஏராளம் குழப்பங்கள் உண்டு. நமது தமிழ்ச் சூழலில் சாதாரண வைத்தியரைக் கூட வைத்திய கலாநிதி என்று குறிப்பிடும் அறியாமை பலரிடம் உண்டு. தங்களை படித்தவர்கள் என்று எண்ணிக் கொள்பவர்கள் கூட வைத்தியர்கள் தொடர்பில் அழைப்பிதழ்களில் எழுதுகின்ற போது, இந்தத் தவறை தொடர்ந்தும் செய்கின்றனர்.

அவ்வாறு எழுதுகின்ற போது, வைத்தியர்களும் அவ்வாறு குறிப்பிடவேண்டாம் – அது தவறு என்று கூறுவதில்லை – ஒரு வேளை அவர்களும் தங்களை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் போலும். கலாநிதிப் பட்டத்தை படித்து பெறுபவர்களும் இருக்கின்றனர் – படிக்காமல் கௌரவ அடிப்படையில் பெறுபவர்களும் இருக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மகி;ந்த ராஜபக்ஷவும் கலாநிதிப் பட்டத்தை பெற்ற ஒருவர்தான் – ஒரு ரஷ்ய பல்கலைக்கழகம் அதனை வழங்கியிருக்கின்றது. ஆனால், அவர் தன்னை எங்கும் அவ்வாறு அழைக்க முற்பட்டதில்லை – மற்றவர்களும் அவரை அவ்வாறு அழைத்ததுமில்லை.

ஆனால், அவ்வாறு அவர் தன்னை அழைத்துக் கொண்டால் அது தவறும் அல்ல – ஏனெனில் கௌரவ கலாநிதிப் பட்டமும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றுதான். ஒருவரது ஆளுமைக்காக, ஒருவர் நீண்டகாலம் குறிப்பிட்ட துறையில் வழங்கிவந்த பங்களிப்புக்காக பல்கலைக்கழகங்கள் ஒருவரை கௌரவிப்பதுண்டு. அது ஒரு உலக நடைமுறை. ஆனால்,அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வால் பிடிப்பதற்காக கலாநிதிகளை வழங்கும் பல்கலைக்கழங்களும் உண்டு.அதேபோன்று, ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் கலாநிதிகளை வழங்கும் மூன்றாம்தர அமைப்புக்களும் உண்டு.

அப்படியான அமைப்பு ஒன்று, ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவிப் பிள்ளையை திருமணம் செய்ய விருப்பம் என்று கூறிய மேர்வின் சில்வாவுக்கும் கலாநிதி பட்டம் வழங்கியிருக்கின்றது. மேர்வின் சில்வாவை நாடாளுமன்றத்தில் ‘டொக்டர்’ என்று அழைத்தமை, ஹன்சாட்டிலும் வந்திருக்கின்றது.கல்லாதவர்கள் கலாநிதியாகுமளவுக்கு கலாநிதிப் பட்டங்கள் வழங்கும் மூன்றாம்தர அமைப்புகள் இப்போது ஏராளம்.ஒரு வேளை சபாநாயகரும் அப்படியொரு கலாநிதியை வைத்துக் கொண்டுதான் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றார் போலும். இப்போது பிரச்னை யார் உண்மையிலேயே கலாநிதிக்காக படித்து, அதனை பெற்றுக் கொண்டார் என்பதுதான். சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் மேர்வின் சில்வாவும் கலாநிதிதான், அரசியலமைப்பு நிபுணர் ஜயம்பதி விக்கிரமரட்ணவும் கலாநிதிதான்.