வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் தொடர்பில் பின்பற்றப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பல திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற கொரோனா பரவலைத் தடுப்பதற்கான விஷேட செயலணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
வெளிநாடுகளிலிருந்து வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் காலத்தை 7 நாள்களாக குறைப்பது உட்பட பல திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
அது மாத்திரமன்றி 7 மில்லியன் ரஷ்ய கொரோனா தடுப்பூசிகளை முன்பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்- என்றார்.
இதனிடையே அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வரவிருக்கும் பண்டிகை காலத்துக்குத் தேவையான சுகாதார வழிகாட்டுதல்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதன்போது தெரிவித்தார்.