ரஷ்ய ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்

0
6

ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புதின் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

இந்த நிலையில், உக்ரைன் போர் குறித்து செய்தியாளர்களுடன் நேற்று (21) பேசிய டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புதினை எந்த நேரத்திலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், அவர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால் அதிகமாக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

“போர் ஒருபோதும் தொடங்கி இருக்கக் கூடாது. திறமையான ஜனாதிபதி இருந்திருதால் போர் நடந்திருக்காது. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் உக்ரைனில் ஒருபோதும் போர் நடந்திருக்காது.

நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்யா போருக்கு சென்றிருக்காது. புதினுடன் எனக்கு மிக வலுவான புரிதல் இருந்தது. மக்களை அவமதித்த பைடனை புதின் அவமதித்தார்.

பைடனை எந்த நேரத்திலும் சந்திக்கத் தயார். இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள், இது ஒரு கொடூரமான சூழல். பெரும்பாலானோர் இராணுவ வீரர்களாக மாறிவிட்டார்கள். நகரங்கள் இடிந்த இடங்களாக காணப்படுகிறது.

உக்ரைனில் அறிவிக்கப்பட்டதைவிட அதிகளவிலான மக்கள் பலியாகியுள்ளனர். உண்மையான எண்ணிக்கையை வெளியிடாததற்கு உங்களை குறை சொல்லவில்லை, வெளியிட விரும்பாத அரசை குறை கூறுகிறேன்.

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதம் அளிக்கப்படுமா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. புதினுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.

அமைதியை விரும்புவதாக உக்ரைன் ஜனாதிபதி என்னிடம் கூறினார். இரு தரப்பினரையும் எந்த நேரத்திலும் சந்திப்பேன். இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை தடுக்க விரைவில் முடிவு காண விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.