இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களில், 13 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய நான்கு மீனவர்களும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை, மன்னார் கடற்பரப்பில், தலைமன்னார் கடற்படையினரால், இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று, வழக்கு மீளவும், மன்னார் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
17 இந்திய மீனவர்களில் இரு மீனவர்களிடம் கைவிரல் அடையாளங்கள் பெறப்படாத நிலையில், அவர்கள் இருவரும், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மீனவர்களுக்கு, இரண்டாவது தடவையாகவும், எல்லை தாண்டி சட்டவிரோத இழுவைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றத்திற்காக, இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதனால், ஏனைய 13 இந்திய மீனவர்களும், தலா 50 ஆயிரம் ரூபா தண்டப் பணத்துடன், இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு, மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.