தையிட்டி விகாரையை இடிக்க முடியுமா?

0
13

தையிட்டி விகாரை கட்டப்பட்டது இப்போது பிரச்னையில்லை – ஆனால், அது தனியார் காணியில் கட்டப்பட்டதுதான் பிரச்னை. எனவே, குறித்த விகாரை அகற்றப்பட வேண்டும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த விடயத்தை தற்போது அடைக்கலநாதனும் உச்சரித்திருக்கின்றார். ஒரு சிறிய புத்தர் சிலையை அகற்றுவதென்றால் அது வேறு விடயம்.

மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ஒரு விகாரையை எவ்வாறு அகற்றுவது. அது நடைமுறைக்கு சாத்தியமான விடயமா? இந்தக் கேள்விக்கு அப்பால், குறித்த விகாரை கட்டப்பட்டு அதில் வழிபாடுகளும் இடம்பெற்றுவரும் சூழலில்தான், குறித்த விடயத்தை தமிழ் அரசியல் வாதிகள் கையிலெடுத்திருக்கின்றனர். அந்த விகாரை கட்டப்படும் வரையில் இந்த அரசியல்வாதிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்.

உண்மையில் அது ஒரு தனியார் காணி என்றால், அதற்கான உரிய ஆவணங்களுடன் பொலிஸில் முறைப்பாடு செய்து, அதனைத் தொடர்ந்து, நீதித் துறையை நாடியிருக்கலாம். உதாரணமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கோ அல்லது செல்வம் அடைக்கலநாதனுக்கோ உரித்தான காணியில் விகாரை கட்ட முடியுமா? அவ்வாறு கட்ட முயற்சிக்கும்போது அவர்கள் அமைதியாக இருந்திருப்பார்களா? தையிட்டி விகாரையின் உரிமையாளர்கள் எதற்காக அமைதியாக இருந்தனர்?

இன்று காணியின் உரிமை தொடர்பில் விவாதம் செய்வோர் ஏன் அன்று அமைதியாக இருந்தனர்? அநுரகுமார அரசாங்கத்துக்கு நெருக்கடியை அல்லது தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் உபாயமாக இந்த விடயத்தை கையிலெடுத்தால், அது மிகவும் சிக்கலான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஏனெனில், இது அடிப்படையில் ஒரு மத விவகாரம். இலங்கையின் இரண்டாவது அதி உயரமான விகாரையாகக் கணிக்கப்படும் ஒரு விகாரையை இடித்தல் என்பது, இலங்கையின் அனைத்து சாதாரண சிங்கள மக்களையும் தாக்கக்கூடிய ஒரு விவகாரமாக மாறினால் மீண்டும் நாட்டில் இனக் குரோதங்களே மேலோங்கும்.

நிச்சயம் அநுர அரசாங்கம் இந்த விடயத்தில் சமரசம் செய்யப் போவதில்லை. அதேவேளை, தமிழ் மக்கள் மத்தியிலும் இந்த விடயத்துக்குப் பரந்த ஆதரவு கிடைக்கப்போவதில்லை. ஏனெனில், தமிழ் மக்கள் பாரம்பரிய கட்சிகள் தொடர்பில் நம்பிக்கையுடன் இல்லை. அதேவேளை ஒப்பீ;ட்டடிப்படையில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி இந்த விடயத்தில் அமைதியாக இருக்கின்றது. உண்மையில், குறித்த தையிட்டி விகாரைக்கான அடிக்கல் நல்லாட்சி அரசாங்க காலத்தில்தான் இடப்பட்டது.

அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் தேனிலவில் இருந்தது. அந்தத் தேனிலவில் தமிழ் அரசு கட்சி, ரெலோ, டி.பி.எல்.எவ். (புளொட்) ஆகியவற்றுக்கு பிரதான பங்குண்டு. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில்கூட, தமிழ் அரசியல்வாதிகள் இந்த விடயத்தை ஒரு முக்கிய விடயமாக முன்வைக்கவில்லை. குறிப்பாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

பொது வேட்பாளர் விடயத்துக்கு ஆதரவளித்து வந்த நிலையில்கூட, ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து உரையாடத் தவறவில்லை. அந்தளவுக்கு ரணிலுடன் அவர்களுக்கு நெருக்கமிருந்தது. ஆனால், இந்த விடயம் தொடர்பில் தவறியும் அவர்கள் ரணிலை நோக்கி விரல் நீட்டவில்லை. அதே வேளை தையிட்டி விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டபோது, அப்போது, வீடமைப்பு அமைச்சராக அமைச்சராக இருந்த சஜித் தனது தந்தையான ரணசிங்க பிரேமதாஸவின் 94ஆவது பிறந்த தினத்தின் போது, 1,125 விகாரைகள் என்னும் சசுனட்ட அருண என்னும் திட்டத்தை அறிவித்தார்.

அவருக்குத்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி தனது ஆதரவை வழங்கிருந்தது. இன்றைய சூழலில் தையிட்டி விகாரையை ஓர் அரசியல் உணர்வெழுச் சிக்கான கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழ் அரசியல்வாதிகள் சிலர் எண்ணக்கூடும். ஆனால், அது நிச்சயம் மதரீதியான குரோதங்களை வளர்க்கவே பயன்படும். ஏனெனில், அதற்கான அடிக்கல் நாட்ட முற்படும் போது, அனைத்துத் தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றுபட்டு அதனை எதிர்த்திருக்க வேண்டும் – அவ்வாறில்லாது, தற்போது அதனை இடிக்க வேண்டும் என்று கூறுவதானது வெளியார் மத்தியிலும் மதரீதியான குரோதமாகவே பார்க்கப்படும். ஒரு விகாரையை, ஆலயத்தை இடிக்க வேண்டும் என்று கூறும் விடயத்தை இராஜதந்திர சமூகம் ஒருபோதும் ஆதரிக்காது.