கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகின!

0
9

எவராக இருப்பினும் பாரபட்சமின்றி சட்டம் அமல்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.காவல்துறை அதிகாரி, இராணுவ அதிகாரி இகுற்றவாளி எனப் பாராமல் அனைவருக்கும் எதிராகச் சட்டம் அமல்படுத்தப்படும் எனக் கூறினார்.நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மித்தெனியவில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரி ஒருவரும், கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தொடர்புடைய ஒரு காவல்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் இல்லாமல் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை விசாரணையில் தற்போதுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும் அமைச்சர் நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்தார்.சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி அன்று இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டவர் என அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

குறித்த நபர் 2024 மே மாதத்தில் பொது மன்னிப்பின் கீழ் இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுவதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.இது தொடர்பான உண்மைகளை சரிபார்க்க, இந்த அறிக்கை பனாகொடையில் உள்ள இராணுவ சம்பளப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சந்தேக நபர் தப்பிச் சென்ற வேனின் இலக்கத் தகடு போலி எனத் தெரியவந்துள்ளது.இதேவேளை நுகேகொட குற்றவியல் புலனாய்வு அதிகாரிகள், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு முன்பதாக பிரதான சந்தேகநபரும் அவருக்கு உதவிய பெண்ணும் தங்கியிருந்த விடுதியை ஆய்வு செய்துள்ளனர்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மகிழுந்து ஒன்றையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

குறித்த விடுதியிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு இவர்களை அழைத்துச் சென்ற மகிழுந்தையே காவல்துறையினர் மீட்டுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு முதல் நாள் குறித்த மகிழுந்தில் வருகை தந்த நபர் ஒருவர் பிரதான சந்தேகநபரிடம் பொதியொன்றை வழங்கியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.