இந்தியாவுக்கான சவால்கள்

0
9

வடக்கு மக்களுக்கு நாமே நிரந்தரமானவர்கள் – ஏனைய நாடுகளை போன்று அவர்களது நலன்களுக்காக இங்கு வந்து செல்பவர்கள் அல்ல நாம் – உங்களுடைய நலன்களை கருத்தில் கொண்டே நாம் யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகத்தை 2010இல் ஆரம்பித்தோம் – ஏனைய நாடுகளின் இராஜதந்திர உறவுகளுக்கும் எங்களும் இடையில் வேறுபாடுண்டு – நாங்களே இங்கு நிரந்தரமானவர்கள் – இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி தெரிவித்திருக்கின்றார்.

வடக்கு நோக்கி சீனாவின் வரவு அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற நிலையில்தான், இவ்வாறானதொரு கருத்தை அவர் தெரிவித்திருக்கின்றார் என்பதை ஊகிப்பது கடினமானதல்ல. 2021இல், இலங்கைக்கான சீனத்தூதுவர் யாழ்ப்பாணத்துக்கான முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அது ஒரு வெள்ளோட்ட வருகையாக இருந்தது. சீனத் தூதுவர் வருவதற்கு முன்னரே சீனாவின் முதலீடுகள் அங்கு வந்துவிட்டன. வடக்கின் மீன்பிடித் துறையில் புதிய ஏற்றுமதிக்கான வாய்ப்பாக, கடலட்டை பண்ணைத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

கடலட்டைத் தொழில் யாழ்ப்பாணத்துக்கு புதிது அல்ல என்றாலும் அதனை கிழக்காசிய சந்தைகளை நோக்கி ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை சீனாவே ஏற்படுத்தியது. கடலட்டை உணவுப்பொருட்கள் இந்தியாவிலோ மேற்குலக நாடுகளிலோ உணவுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதற்கான சந்தை கிழக்காசிய நாடுகளில்தான் இருக்கின்றது – குறிப்பாக சீனாவில் கடலட்டை உணவுகள் விலைமிக்கவை. வடக்கு மாகாணத்தின் மீது, குறிப்பாக வடக்கின் மீன்பிடித் துறையின் மீது சீனாவின் கவனம் திரும்பியது தற்செயலான ஒரு விடயமோ, எதேச்சையாக திட்டமிட்டப்பட்ட விடயமோ அல்ல என்பதையும் புரிந்து கொள்வதும் கடினமானதல்ல.

எனினும், புதிய வருவாயை ஈட்டுவதற்கான வாய்ப்பு கிடைகின்றபோது, உள்ளூர் வர்த்தகர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பர் என்பதும் இயல்பானதே. சீனத் தூதுவரின் முதல் விஜயத்தின் போது, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, 20 மில்லியன் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இது ஆரம்பம் என்பதை அழுத்திக் குறிப்பிட்டிருந்த சீனத் தூதுவர், அதனைத் தொடர்ந்து, இரண்டு தடவைகள் வடக்குக்கு விஜயம் செய்திருக்கின்றார். இந்தப் பின்புலத்தில், சீனாவுக்கும் வடக்கு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சிகளில், முன்னர் எப்போதும் இல்லாதளவுக்கு இலங்கைக்கான சீனத் துதரகம் ஆர்வம் காண்பித்து வருகின்றது என்பதும் அவதானிப்பதற்கு கடினமான விடயமல்ல.

இந்த விடயங்கள் இந்தியாவுக்கு மகிழ்சியான விடயமல்ல. இதுவரையில் தென்னிலங்கையின் மீதே சீனாவின் பிரதான கவனம் இருந்தது. அங்குதான் சீனாவின் பெரும் முதலீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன – அதற்குமப்பால் மூலோபாய முக்கியத்தும் மிக்க திட்டங்கள் காணப்படுகின்றன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் இந்தியாவின் பெரும் திட்டங்களே உரையாடலில் இருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் படியும், இந்தியாவுக்கு உரித்துடன் கூடிய ஈடுபாடுக்குரிய இடமாகும். ஆனால், வடக்கு கிழக்கை நோக்கியும் சீனா அதன் திட்டங்களை விரிவாக்க முயற்சிக்கின்றது. அடிப்படையில் இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன்களின் வழியாக நோக்கினால் இது சிக்கலானதுதான். ஆனால், இதனை முற்றிலுமாக தடுத்து விடவும் முடியாது. இவ்வாறானதொரு நிலையில் சீனாவின் செல்வாக்கை ஓர் எல்லைக்குள் முடக்க வேண்டிய தேவை இந்தியாவுக்குண்டு. அதனடிப்படையில் இந்தியா சில விடயங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதை புரிந்துகொள்ளலாம்.