மட்டக்களப்பு ஆரையம்பதியில் வாள் வெட்டு: வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கக் கோரி மக்கள் போராட்டம்!

0
18

மட்டக்களப்பு ஆரையம்பதியில், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு நீதிகோரி இன்று ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பல்வேறு சுலோகங்களை தாங்கியாறு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கோசங்களையும் எழுப்பினர். கடந்த 20ம் திகதி ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில், ஆரையூர் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த இருவர் மீது, ஆறுபேர் கொண்ட கும்பல் வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தியது.


இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஆரையம்பதிப் பகுதியில் வன்முறைக் கும்பல்களின் அட்டகாசங்களைக் கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்களால் மண்முனைப்பற்று பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.