உத்தரவை மீறிப் பயணித்த கார் – மடக்கிப்பிடித்த காவல்துறை

0
4

காவல்துறையினரின் உத்தரவை மீறிப் பயணித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் காரினை செலுத்திய 20 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு பண்டாரகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிறந்தநாள் வீடொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வேளையில் குறித்த நபரை காவல்துறையினர் வீதி போக்குவரத்து சோதனைக்காக நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர். எனினும் குறித்த நபர் காவல்துறையினரின் சைகையினை பொருட்படுத்தாமல் காரை வேகமாக செலுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் உந்துருளியில் குறித்த காரை தடுத்து நிறுத்துவதற்காக சென்றுள்ளனர். அதிவேகம் காரணமாக குறித்த கார் ஏனைய வாகனங்களுடன் மோதுண்டு விபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. களனிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு செல்லும் பாதையில் குறித்த நபர் காரை செலுத்திச் சென்றுள்ளார். எனவே காரை பின் தொடர்ந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் களனிகம நுழைவாயிலில் கடமையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரியிடம் குறித்த தகவலை அறிவித்து காரை நிறுத்தும் படி கூறியுள்ளனர்.

அதற்கமைய துரிதமாக செயற்பட்டு காரை நிறுத்திக் குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காரை செலுத்தியவர் மதுபோதையில் இருந்தாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை சந்தேக நபர் ஓட்டிச் சென்ற கார் மற்றொரு காருடன் மோதியதில் சந்தேகநபர் ஓட்டிச் சென்ற காரின் முன்பகுதி சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.