சதியா அல்லது பதவிப் போட்டியா?

0
9

இலங்கைத் தமிழ் அரசு கட்சியை பிளவுபடுத்த சதிகள் நடக்கின்றன என்று கட்சியின் தற்காலிக தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்திருக்கிறார். புதிய அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்குக் கட்சியிடமுள்ள திட்டங்கள் என்ன? தமிழ் மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வாழ்வை மேம்படுத்துவதற்கு கட்சி எவ்வாறான செயல்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது? போன்ற விடயங்கள் தொடர்பில் சீ. வீ. கே. சிவஞானம் இதுவரையில் பேசியதில்லை. மாறாக, தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதிலிருந்து அவ்வப்போது தங்களின் உள்பிரச்னை பற்றியே பேசிவருகிறார்.

இதிலிருந்து கட்சியைப் பிளவுபடுத்துவதற்கு எவரும் சதி செய்யவில்லை. மாறாக, கட்சிக்குள் இருக்கும் சிலருக்கிடையிலான பதவிப் போட்டியால் கட்சி சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் புதிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நிலையில் வலுவானதோர் அரசியல் ஸ்தாபனத்தை உருவாக்கும் முயற்சியில் இதுவரையில் எவருமே வெற்றிபெற வில்லை – அவர்களால் முடியவில்லை. இந்த நிலையில்தான், இருப்பதில் பரவாயில்லை என்னும் அடிப்படையில் மக்கள் வேறு வழியின்றி தமிழ் அரசு கட்சிக்கு வாக்களித்து வருகின்றனர். இதன் காரணமாகவே, தமிழ் அரசுக் கட்சியால் இப்போதும் அதனை ஒரு கட்சியாக முன்னிறுத்திக் கொள்ள முடிகிறது.

தென்பகுதியை உற்று நோக்கினால் தேர்தல்களில் ஒரு குறிப்பிட்ட சூழலில் தோல்வியை சந்திக்கும் கட்சிகள் புதிய அரசியல் சவால்களை துல்லியமாக மதிப்பிட்டு அதற்கேற்ப தங்களை பலப்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதை காணக்கூடியதாக இருக்கிறது. மொட்டு சின்னம் தென்னிலங்கைக்கு பரிட்சயமில்லாத சின்னம். ஆனால், பஸில் ராஜபக்ஷ தலைமையிலான அணி மிகவும் குறுகிய காலத்தில் அந்த சின்னத்தை சிங்கள மக்களுக்கான புதிய அரசியல் சின்னமாக முன்னிறுத்துவதில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்தே அவர்களால் தேர்தலில் வெற்றி பெறமுடிந்தது.

கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நன்கு திட்டமிட்ட வகையில் பயன்படுத்திக் கொண்ட ஜே. வி. பியானது, ராஜபக்ஷக்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து சிங்கள மக்களுக்குள் தங்களை ஒரேயொரு மாற்றுத் தலைமையாக முன்னிறுத்துவதில் வெற்றிபெற்றது. அரிய வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இன்று தமிழ் மக்களும் அவர்களை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கும் நிலைமை உருவாகிவிட்டது. ஆனால், தமிழ்ச் சூழலை உற்று நோக்கினால் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்போர் அனைவரதும் ஒரேயோர் இலக்கு எப்படியாவது தாங்கள் பாராளுமன்றம் சென்றுவிட வேண்டும்.

இதனைத்தவிர, அவர்களிடம் வேறு எந்தவொரு சிந்தனையும் இல்லை. கட்சியை அடுத்த கட்டத்துக்கு வளர்க்க வேண்டும் என்னும் எண்ணமோ இம்மியளவுகூட அவர்களிடம் இல்லை. இந்த நிலையில்தான் யுத்தத்துக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களில் ஒரு வலுவான ஜனநாயக அரசியல் அடித்தளத்தை எவராலும் உருவாக்க முடியாமல் போனது. இனியும் அது நடக்கும் என்பதற்கான எந்தவொரு நம்பிக்கைக் கீற்றையும் காணமுடியவில்லை.

பொதுவாகத் தங்களுடைய தவறுகளால் சறுக்கி விழுகின்றபோது, அதற்கான காரணத்தை வெளியில் தேடும் ஓர் அரசியல் நோய் தமிழர்களுக்கென்று கட்சி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இருந்து வருகின்ற ஒன்றுதான். எழுச்சி என்றால் அது எங்களின் புத்திசாலித்தனம் – அர்ப்பணிப்பு – தியாகம். ஆனால், அதுவே வீழ்ச்சி – சரிவு – தோல்வி – அழிவு என்றவுடன் அதற்கு மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவது. இது அரசியல் அல்ல மாறாக ஓர் அரசியல் மனநோய்.