மீனவர் பிரச்னையில் தமிழ்நாடு

0
18

‘இலங்கை பயணத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்னையை கண்டு கொள்ளவில்லை’, என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இலங்கை பயணத்தின்போது மோடி இது தொடர்பில் பேசியிருந்தார். தமிழ் கட்சிகளுடனான சந்திப்பின்போதும் இலங்கை மீனவர் பிரச்னை தொடர்பில் தமிழ் கட்சிகள் சுட்டிக்காட்டியிருந்தன என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தப் பிரச்னை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை மோடி, மீண்டும் தனது பயணத்தின்போது வெளிப்படுத்தியிருந்தார். அதாவது, ‘இந்த விடயத்தில் மனிதநேய அணுகுமுறை வேண்டும்’ , இதன்மூலம் அவர் என்ன கூறுகின்றார். இந்த விடயத்தில் இந்திய மீனவர்களை கைது செய்து தடுத்து வைப்பதோ – அவர்களை தாக்குவதோ தீர்வல்ல. அதற்கு மாறாக, இந்த விடயத்தை மனிதநேயத்தோடு அணுகவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

இந்த நிலைமையை எவ்வாறு மனிதநேயத்தோடு அணுகுவது? இதிலுள்ள அடிப்படையான பிரச்னை தமிழ்நாடு. இது தொடர்பில் ‘ஈழநாடு’ முன்னரும் சில விடயங்களை சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்த விடயத்தில் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவு கட்டாயமானது. இது தொடர்பில், தமிழ்நாட்டை எவ்வாறு அணுகுவது என்று தமிழ் அரசியல் தரப்புகள் சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினை இது தொடர்பில் அணுகவேண்டும். இதுவரையில் இந்த விடயம் தொடர்பில் ஆக்கபூர்வமான சந்திப்புகள் எதனையும் தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகளாக தங்களை அடையாளப்படுத்துபவர்கள் முன்னெடுக்கவில்லை.அயலக மாநாட்டில் பங்குகொள்கின்றனர். ஆனால், மீனவர் பிரச்னை தொடர்பில் உத்தியோகபூர்வமான பேச்சுகளில் இது வரையில் தமிழ் அரசியல் தரப்புகள் பங்குகொள்ளவில்லை.

வெறுமனே இந்திய மத்திய அரசிடம் முறையிடுவதால் இந்தப் பிரச்னையை கையாள முடியாது. இந்திய மத்திய அரசும் கூட, அவ்வாறான அணுகுமுறையையே விரும்புவதாகத் தெரிகிறது. இரண்டு தரப்புகளும் தங்களுக்குள் பேசி பிரச்னையை தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும் என்றே கருதுவதாகத் தெரிகிறது. ஏனெனில், வடக்கு மாகாண அரசியல்வாதிகளும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் உரையாடுவதில் ஒரு தடையுமில்லை.

கலாசார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் ஒருவரோடு ஒருவர் பின்னிப்பிணைந்த வரலாற்றைக் கொண்டிருப்பவர்கள். எனவே, இந்தப் பிரச்னையை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள முடியுமென்றே புதுடில்லி கருதக்கூடும். இந்த அடிப்படையில்தான், இந்திய மத்திய அரசு தொடர்ந்தும் மனிதநேய அணுகுமுறையை வலியுறுத்தி வருகிறது. எனவே, இந்த விடயத்தில் பிரச்னைக்குரிய தரப்புகளான ஈழத் தமிழர் பிரதி நிதிகளும் தமிழ் நாட்டு அரசாங்கமும் உரையாட வேண்டும். வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற பின்னர் இரு மாகாண அரசாங்கங்கள் என்னும் வகையிலும் இந்த விடயத்தை அணுகலாம்.