அரசியல் கைதியான கிருபாகரன் திடீரென்று கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் இருந்து அம்பாந்தோட்டை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட விடயம் சம்பந்தமாக திங்கட்கிழமை (12) சிறைச்சாலை திணைக்களத்தின் தீர்மானம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
அரசியல் கைதியாக தொடர்ந்தும் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றவர்களில் ஒருவரான கிருபாகரன் என்பவர் கடந்த ஒக்டோபர் மாதம் காரணமெதுவுமின்றி கொழும்பு மகசீன் சிறைச்சாலையிலிருந்து அம்பாந்தோட்டை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
6 மாதங்களுக்கும் அதிகமாக அம்பாந்தோட்டை சிறைச்சாலையிலே வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான 4 வழக்குகளில் 3 வழக்குகள் கொழும்பில் நடைபெற்றுவரும் நிலையில் அவருடைய சட்டத்தரணி என்னுடன் தொடர்பு கொண்டார்.
அவர் சட்டத்தரணியாக முன்னிலையாகியிருக்கும் தன்னுடைய கட்சிக்காரரான கிருபாகரனுக்கு சரியான வகையில் கடமையாற்ற முடியாதுள்ளதாகவும் கிருபாகரன் அம்பாந்தோட்டை சிறைச்சாலையில் உள்ள நிலையில் அவரை சென்று சந்தித்து அவருடன் கதைக்க முடியாமல் உள்ளதாகவும் என்னிடம் பலமுறை முறைப்பாடு செய்திருந்தார்.
கிருபாகரனுடன் நான் பேசிய போது அவரும் அதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்தவகையில் – சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உபுல் தெனியவுடன் தொடர்புகொண்டு 6 மாதங்களுக்கு முன்னதாக இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தேன்.
ஒழுக்காற்று விடயமாகவே கிருபாகரன் அம்பாந்தோட்டை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவருடைய தண்டனைக்காலம் நிறைவடைந்துள்ளதா என்பதை பார்த்து மீண்டும் அவரை கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆணையாளர் அவ்வாறு கூறி மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் கிருபாகரனை கொழும்புக்கு கொண்டு வருவதற்குரிய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இவ்விடயம் குறித்து பேசுவதற்கு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துடன் தொடர்புகள் எடுத்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவர் தொடர்புக்கு வருவதைத் தவிர்த்து வந்திருந்தார்.
மேலும் 3 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் முற்கூட்டிய அறிவித்தல் எதுவுமின்றி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உபுல் தெனியவை சந்திப்பதற்கு முயற்சித்திருந்தேன். ஆனால் அவர் வேறு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக தெரிவித்து என்னை சந்திப்பதைத் தவிர்த்திருந்தார்.
பின்னர் சிறைச்சாலை அதிகாரி திஸநாயக்க என்பவரை சந்தித்திருந்தேன். சந்தித்து விடயங்களை தெரிவித்தபோது அரசியல் கைதியான கிருபாகரனின் தண்டனை விடயங்கள் தொடர்பாக தனக்கு எதுவுமே தெரிவித்திருக்கவில்லை என்று குறிப்பிட்டதுடன், அவர் தொடர்பான கோப்புக்களை பார்த்து புலனாய்வு பிரிவால், வந்திருக்கும், அறிக்கையின் அடிப்படையில்தான் அவர் அம்பாந்தோட்டை சிறைக்கு மாற்றப்பட்டிருந்ததாகவும், ஆனால் அந்த அறிக்கை தற்போது தன்னிடம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
கிருபாகரன் ஏன் இடமாற்றம் செய்யப்பட்டார்? என்பது குறித்து கிருபாகரனுக்கோ அல்லது அவரது சட்டத்தரணிக்கோ தெரிவித்திருக்கவில்லை.
நீதிமன்றத்துக்கும் அறிவிக்கவில்லை. சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உபுல்தெனிய தண்டனை இடமாற்றம் என்று எனக்கு 6 மாதங்களுக்கு முன்னர் சொல்லியிருந்தார்.
ஆனால் 3 மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் அவரை வேறொரு சிறைச்சாலையில் வைத்திருப்பது வழமையான விதிமுறைகளை மீறுவதாகவே இருக்கின்றது.
ஆகவே இந்த விடயத்தைக் கருத்தில்கொண்டு அவரை மீளவும் கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு மீண்டும் கொண்டு வருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், இவ்விடயம் குறித்து ஆராய்ந்து திங்கட்கிழமை எனக்கு தெரியப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.